மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னிலையில் உள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னிலையில் உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.;
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னிலையில் உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
கிராமசபை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் கரிக்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் செலவினம் மற்றும் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அது குறித்த செலவினம் குறித்தும், ஏப்ரல் 2022 முதல் செப்டம்பர் 2022 முடிய கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
முன்னிலை
ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். இவைகள் அனைத்தும் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும். பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பணியாணைகள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இவைகளை உடனடியாக முடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாகவும், பழங்குடியினர் நலத்துறை மூலமாகவும் சம்பந்தப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதில் மாநிலத்திலேயே முன்னிலையில் இருந்து வருகிறோம்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மீண்டும் மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது. பிளாஸ்டிக்கை எரிக்க வேண்டாம். மாவட்டத்தில் 7 ஒன்றியங்களிலும் பிளாஸ்டிக் அரவை எந்திரங்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் பொருள்களை தூள் செய்து சாலைகள் போடுவதற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பனை விதை
முதல்-அமைச்சர் பசுமைத் தமிழகம் திட்டத்தை தமிழகத்தில் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தில் நமது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. நாளை (இன்று) பனை மர விதைகளை அதிகளவில் நட அனைத்து ஊராட்சிகளிலும் தயார் நிலையில் உள்ளது. இதில் அதிக அளவு பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
18 வயதிற்கு குறைவானவர்களுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதற்கு இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும். ஆகவே தாய்மார்கள் பெண் பிள்ளைகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து சோளிங்கர் பெருமாள் கோவிலில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி விருந்தில் பொதுமக்களுடன். கலெக்டர் இணைந்து மதிய உணவு சாப்பிட்டார்.
கிராம சபை கூட்டத்தில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நாகராஜு, ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) மணிமேகலை, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆனந்தன், ஆதிதிராவிட நல தாசில்தார் நடராஜன், காங்கிரஸ் நகர தலைவர் கோபால், தொகுதி பொறுப்பாளர் ராஜா, தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்திரன், ஒன்றிய குழு தலைவர் பூங்கொடி ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.