சிறுமிக்கு சூடு வைத்து கொடுமை
உண்டியல் பணத்தை திருடியதாக சூடு வைத்து சிறுமியை கொடுமைப்படுத்திய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.;
பொள்ளாச்சி
உண்டியல் பணத்தை திருடியதாக சூடு வைத்து சிறுமியை கொடுமைப்படுத்திய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
8 வயது சிறுமி
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருக்காணி(வயது 36). இவரது வீட்டில் இருந்த உண்டியல் பணம் காணாமல் போயிருந்தது. அந்த பணத்தை பக்கத்து வீட்டை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி திருடி இருக்கலாம் என்று அவருக்கு, சந்தேகம் எழுந்தது. இதற்கிடையில் அந்த சிறுமி, அருக்காணியின் வீட்டின் முன்பு விளையாடி கொண்டு இருந்தாள். இதை கண்ட அவர், அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார்.
சூடு வைத்து கொடுமை
பின்னர் உண்டியல் பணத்தை ஏன் திருடினாய் என்று கேட்டு திட்டினார். மேலும் ஆத்திரம் அடங்காமல் இரும்பு கம்பியை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதை கொண்டு அந்த சிறுமியின் 2 கைகளிலும் சூடு வைத்து கொடுமை செய்தார். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறிடித்துடித்தாள்.
சத்தம் கேட்டு அவளது பாட்டி அங்கு ஓடி வந்தார். பின்னர் சிறுமியை மீட்டு அருக்காணியை தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிறுமியின் பாட்டியையும் அருக்காணி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியை அனுமதித்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருக்காணியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
உண்டியல் பணத்தை திருடியதாக சூடு வைத்து சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.