மருத்துவ வசதிகள் இன்றி மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் மருத்துவமனையாக உள்ளது
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவ வசதிகள் இன்றி மேல்சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் மருத்துவமனையாக செயல்படுகிறது என மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்;
கடலூர்
ஊராட்சிக்குழு கூட்டம்
கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் திருமாறன் தலைமையில் கடலூரில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தார். இதையடுத்து கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
கவுன்சிலர் சக்திவிநாயகம்:- நல்லூர் அருகே சேதுவராயன்குப்பம், அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பள்ளி, கல்லூரி சென்றுவர பஸ் வசதி ஏதும் இல்லை. அதனால் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
கவுன்சிலர் தமிழரசி: மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருட்களின் விற்பனை அதிகளவில் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். அதனால் பிள்ளைகளை பெற்றோர் ஒழுங்காக கவனிக்க வேண்டும். மேலும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். அம்மேரியில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வித வசதியும் இல்லை
சண்.முத்துக்கிருஷ்ணன்: மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் தீர்மானத்தில் கையெழுத்து போடவே அழைக்கப்படுகின்றனர். 4 ஆண்டுகளாக நடக்கும் ஊராட்சிக்குழு கூட்டத்தால் எந்த நன்மையும் இல்லை. தமிழ்நாட்டில் எந்த ஒரு வசதியும் இல்லாத மருத்துவமனையாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லிக்குப்பம் அருகே நடந்த விபத்தில் 120 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவருக்கு கூட முறையாக சிகிச்சை அளிக்க முடியாத மருத்துவமனையாக உள்ளது. மருத்துவ வசதிகள் இன்றி அனைவரும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளுக்கு தான் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதனால் போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். கடலூர் சிப்காட்டில் மக்களிடம் இருந்து 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 80 தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டது. தற்போது அங்கு 20 தொழிற்சாலைகள் தான் இயங்குகிறது. அதனால் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலை பணிக்காக எம்.புதூரில் 200 ஏக்கரில் மலை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்த மலையை காணவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் பல கவுன்சிலர்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் எவ்வித வசதிகளும் இல்லை என குற்றஞ்சாட்டினர்.
சாலை அமைக்க...
அன்புக்கரசி: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சாலை அமைக்க, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர், செயலாளர் ஆகியோர் கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இதில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.