ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட பரிதாபம்

வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவத்தில், ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2023-10-21 20:30 GMT
வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவத்தில், ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று உயிரை விட்ட உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.


கல்லூரி மாணவர்கள்


கோவை மாவட்டம் வால்பாறையானது, மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தேயிலை தோட்டங்கள், நீர்நிலைகள் காண்போரை கவரும் வகையில் உள்ளன. இவற்றை கண்டு ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


அந்த வகையில், கிணத்துக்கடவு அருகே வடபுதூர் ஊராட்சி மணிகண்டபுதூரை சேர்ந்த வினித்(வயது 20), தனுஷ்(20), அஜய்குமார்(20), பெரியகளந்தையை சேர்ந்த சரத்(20), உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த நபில்(20), சைமன் ஆகியோர் தங்களது நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.


ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வீதம், 5 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் வந்தனர். இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் ஆவர்.


உடல்கள் மீட்பு


அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்துவிட்டு, சோலையாறு சுங்கம் ஆற்றில் குளித்தனர்.


அப்போது வினித், நபில், அஜய்குமார், தனுஷ், சரத் ஆகியோர் சுழலில் சிக்கி உயிரிழந்தனர். இதை அறிந்த வால்பாறை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அவர்களின் உடல்களை ஒரு மணி நேரத்தில் மீட்டு, அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆகும் என்பதால், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு, உடல்களை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.


அதன்படி பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டு சென்றது. பின்னர் உடல்களை ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தது.


உருக்கமான தகவல்கள்


இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் ஜெய்சிங் தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்பு குழுவினர், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதற்கிடையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 மாணவர்களும் ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது உயிரை விட்ட உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


நண்பரை மீட்க சென்று...


மணிகண்டபுதூரை சேர்ந்த வினித், தனுஷ், அஜய்குமார், பெரியகளந்தையை சேர்ந்த சரத், உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த நபில், சைமன் உள்பட கல்லூரி மாணவர்கள் 10 பேர் இணைந்து வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் வரும் வழியில் பனிமூட்டம் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள் உள்பட இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர். அதோடு ஆங்காங்கே மகிழ்ச்சியுடன் குழு புகைப்படங்களும் எடுத்து கொண்டனர்.


பின்னர் அவர்கள் சோலையாறு சுங்கம் ஆற்றுப்பகுதிக்கு சென்றனர். அங்கு தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது சைமன் ஆழமான பகுதிக்கு சென்று சுழலில் சிக்கினார். உடனே காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். இதை கண்ட வினித் சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்து சைமனை மீட்டு கரைக்கு அனுப்பி வைத்தார்.


ஆனால் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் அவரால் கரைக்கு திரும்ப முடியவில்லை. உடனே அவரை மீட்க நபில் தண்ணீரில் குதித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரும் சுழலில் சிக்கினார்.


கதறி அழுதனர்


இதற்கிடையில் ஏற்கனவே ஆற்றில் குளித்து ஈரத்துணிகளை மாற்றிவிட்டு புறப்பட தயாராக இருந்த அஜய்குமார், தனுஷ் ஆகியோர் தங்களது நண்பர்கள் சுழலில் சிக்கி தவிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


உடனே அவர்கள் தண்ணீரில் குதித்து தங்களது நண்பர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்களும் சுழலில் சிக்கி கொண்டனர். இதை கண்ட சரத், தண்ணீரில் குதித்து, அவர்களை மீட்க முயன்றார். தொடர்ந்து அவரும் சுழலில் சிக்கினார்.


இவ்வாறு ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்று 5 பேரும் தண்ணீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவை அனைத்தும் தங்களது கண் எதிரே நடந்தேறியதை கண்டு சக நண்பர்கள் எதுவும் செய்வதறியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்