வாய்காலின் குறுக்கே தடுப்புகள் இல்லாத பாலம்

வாய்காலின் குறுக்கே தடுப்புகள் இல்லாத பாலம்;

Update: 2022-11-06 11:01 GMT

உடுமலை

உடுமலை அருகே உள்ள குறிஞ்சேரியில் பாலத்தின் இரண்டு புறமும் தடுப்புகள் இல்லாததால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் அந்த இடத்தில் உயர் மட்டபாலம் கட்டவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜவாய்க்கால் பாலம்

உடுமலை அருகே உள்ளது குறிஞ்சேரி. இந்த ஊராட்சி பகுதியில் ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த ஊராட்சி குடியிருப்புகளுக்கு அருகில் ராஜவாய்க்காலின் குறுக்கே உயரம் குறைந்தபாலம் உள்ளது. பெதப்பம்பட்டி சாலையில் இருந்து குறிஞ்சேரி வழியாக செல்லும் இந்த சாலை சின்னவீரம்பட்டியை அடுத்துள்ள பகுதியில் திருப்பூர் சாலைக்கு சென்று இணைகிறது. பெதப்பம்பட்டி சாலை, திருப்பூர் சாலை ஆகிய 2 சாலைகளின் இணைப்பு சாலையான இந்த சாலைவழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த பாலத்தின் இரண்டு புறமும் இருந்த காங்கிரீட் தடுப்பு தூண்களில் பெரும்பாலான தூண்கள் சேதமடைந்து விழுந்துவிட்டது. அதனால்தற்போது அந்த பாலத்தின் 2புறமும் பாதுகாப்புக்கான தடுப்புகள் இல்லை. அதனால் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த வாய்காலில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.அப்போது வெள்ளம் இந்த பாலத்தை மூழ்கடித்தபடி ஓடும்.அப்படிப்பட்ட நேரங்களில் இந்த பாலத்தை கடந்து செல்ல முடியாது.

உயர் மட்டபாலம்

அதனால் அந்த இடத்தில் உயர் மட்ட பாலம் கட்டவேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அத்துடன் உடுமலை நகராட்சி பாதாளசாக்கடை திட்டத்தில் கழிவுநீர் பெதப்பம்பட்டி சாலையில் ஏரிப்பாளையம் அருகில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் அந்தகழிவுநீர் இந்த ராஜவாய்க்காலில்தான் விடப்படுகிறது. இந்த நிலையில் பாலம்பகுதியில் கழிவுநீருடன் கலந்த மழைத்தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்