ஐ.டி. கம்பெனி ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் நூதன வழிப்பறி - திருநங்கைகள் அடாவடி

சென்னையில் ஐ.டி. கம்பெனி ஊழியரை மிரட்டி அவரது வங்கி கணக்கில் இருந்து ‘ஜிபே’ மூலம், இன்னொரு வங்கி கணக்கிற்கு ரூ.20 ஆயிரத்தை மாற்றி நூதன வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2023-02-28 06:07 GMT

சென்னை ஆர்வார்திருநகரைச் சேர்ந்தவர் குருசாமி. இவர் ராமாவரத்தில் உள்ள ஐ.டி. கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்கிறார். இவர், நேற்று முன்தினம் கே.கே.நகரில் உள்ள சினிமா தியேட்டரில் பிற்பகல் 2.30 மணி காட்சி படம் பார்த்தார். படம் முடிந்து வெளியில் வந்த அவர், 100 அடிசாலையில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டார். அப்போது அங்கு 2 திருநங்கைகள் உள்பட 5 பேர் வந்தனர்.

அவர்கள் குருசாமியை மிரட்டி அருகில் உள்ள சந்துக்கு அழைத்து சென்றனர். அவரது வங்கி கணக்கில் இருந்து, 'ஜிபே' மூலம் இன்னொரு வங்கி கணக்கிற்கு ரூ.20 ஆயிரத்தை மாற்றினார்கள். பின்னர் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். கண நேரத்தில் இந்த நூதன வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் உள்பட 5 பேர் மீதும் குருசாமி, எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுபோல் வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி வழிப்பறி கொள்ளையடிக்கும் இந்த சம்பவம் புதிதாக சென்னையில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

உதவி கமிஷனர் தனசெல்வன் தலைமையில் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். நடந்த சம்பவம் கேமரா காட்சியில் பதிவாகி இருப்பதாகவும், குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்