64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
நீலகிரி மாவட்டத்தில் தரமான சேவை வழங்கி வரும் 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தரமான சேவை வழங்கி வரும் 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கடைகள்
நீலகிரி மாவட்டத்தில் 404 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தநிலையில் தரமான சேவை வழங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று பெற தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி தொழிலின் தரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஐ.எஸ்.ஓ.: 9001 மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, வினியோகத்தின் சிறந்த செயல்பாட்டிற்கான ஐ.எஸ்.ஓ.: 28000 என 2 வகையான தர சான்றிதழ் பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 64 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தரச்சான்று
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்டுப்பாட்டில் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
இதில் கேஷ் பஜார், மினிசூப்பர் மார்க்கெட், வண்டிபேட்டை, வண்ணாரபேட்டை, அப்பர் குன்னூரில் 2 கடைகள் என 60 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ.: 9001 தரச்சான்று வாங்கப்பட்டு உள்ளது. முத்தோரை, தாய்சோலை, தூனேரி, எல்லக்கண்டி ஆகிய 4 ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ.: 28000 தர சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் க்யூஆர் கோடு முறையில் பணம் செலுத்தும் வசதி நீலகிரியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர தமிழக அரசு சார்பில் ரேஷன் கடையில் கேழ்வரகு வழங்கும் திட்டமும் முதல் முதலாக நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.