கிராம சபை கூட்டத்தின் நோக்கம் நிறைவேறுகிறதா?
கிராம சபை கூட்டத்தின் நோக்கம் நிறைவேறுகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று பேசப்பட்டாலும் கிராமப்பகுதிகளின் வளர்ச்சி இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தநிலையில் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் கிராமப்பகுதி மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கிராம சபை கூட்டம்
அதன்படி கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு நிதி மேலாண்மை அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் கிராம மக்கள் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் திட்டப்பணிகள் மற்றும் தங்கள் தேவைகள் குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில் கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் மற்றும் அரசு அறிவுறுத்தும் நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
கலெக்டர் உள்பட பல்வேறு மாவட்ட, வட்டார அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தில் நடைமுறையை மேற்பார்வயிடுகின்றனர். கிராம சபை கூட்டம் நடைபெறுவது தொடர்பாக 7 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. மேலும் கிராம சபை கூட்டத்தில் கிராம பஞ்சாயத்தின் வரவு, செலவு அறிக்கை திட்ட பணிகள், நிதி மேலாண்மை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவு
இதுதவிர அவ்வப்போது அரசு தெரிவிக்கும் பல்வேறு பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் 450 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த கிராம பஞ்சாயத்துக்களில் 1,800-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த 450 கிராம பஞ்சாயத்துக்களிலும் அரசு அறிவிக்கும் நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்பினரும், ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கிராமசபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஐகோர்ட்டும் வழிகாட்டுதல், உத்தரவுகள் வழங்கி உள்ளது.
கேள்விக்குறி
கிராம சபை கூட்டங்கள் நடத்துவதில் கிராம பஞ்சாயத்துகளின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர் ஆகியோருடைய ஒருங்கிணைந்த செயல்பாடு மிக அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. இந்தநிலையில் பல்வேறு காரணங்களால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும் நிலையில் அது பஞ்சாயத்து நிர்வாகத்தையும், அதனை தொடர்ந்து கிராம சபை கூட்ட செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம் ஆகிறது. பல்வேறு நிலைகளில் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் அதற்கு முறையாக தீர்வு காணப்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பலன் இல்லை
எந்த நோக்கத்திற்காக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியதோ அந்த நோக்கம் நிறைவேறியுள்ளதா என்பதையும் உறுதியாக கூற முடியாத நிலையே உள்ளது. ஒரு சில பஞ்சாயத்துக்களில் முறையாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு கிராம மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு, செலவு நிதிநிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்படுகிறது. மேலும் கிராம மக்களின் தேவையை கேட்டறிந்து அதை நிறைவேற்றிட பஞ்சாயத்து நிர்வாகம் முடிந்த அளவு நடவடிக்கை எடுக்கிறது.
ஆனால் பஞ்சாயத்துக்களில் பல்வேறு காரணங்களால் கிராம சபை கூட்டங்கள் நடத்துவதிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் கிராம மக்களுக்கு அதன் பலன் கிடைக்காத நிலையே உள்ளது.
நோக்கம் நிறைவேறியதா?
மொத்தத்தில் எந்த நோக்கத்திற்காக கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறி உள்ளது என்று கூற முடியாத நிலையில் இருக்கிறது. எனினும் கிராம மக்களும், பஞ்சாயத்து நிர்வாகமும் நினைத்தால் கிராமசபை கூட்டத்தை நல்ல முறையில் நடத்தி அதன் மூலம் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும், கிராம மக்களுக்கும் இடையே உறவை பலப்படுத்தி கிராமத்தை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படும்.
இதற்கு மாவட்ட நிர்வாகமும் வளர்ச்சித்துறை அதிகாரிகளும் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதின் நோக்கம் நிறைவேறியதா என்பது பற்றி பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
வெளிப்படை தன்மை
கொத்தனேரி பஞ்சாயத்து தலைவர் லட்சுமண பெருமாள்:-
கிராம சபை கூட்டம் நடத்துவதால் பஞ்சாயத்து நிர்வாகத்தின் செயல்பாடுகள், வரவு, செலவு நிலைமை ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் கிராம மக்களும், தங்களுக்கு தேவையான பணிகள் குறித்து பஞ்சாயத்திடம் தெரிவித்தால் நிதிநிலைமையை பொறுத்து பஞ்சாயத்து நிர்வாகமும் அதனை செயல்படுத்திட வாய்ப்பு ஏற்படும். கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளும், அப்பகுதியில் உள்ள மக்களும் கலந்து கொண்டால் தான் வெளிப்படை தன்மையுடனான நிர்வாக செயல்பாடு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
மொத்தத்தில் கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும், கிராம மக்களுக்கும் பயனுள்ளதாகவே உள்ளது. தொடக்க காலங்களில் கிராம சபை கூட்டங்கள் சரிவர நடத்தப்படாத நிலை இருந்தது. ஆனால் சமீபகாலமாக இதன் அவசியத்தையும், அத்தியாவசியத்தையும் உணர்ந்த கிராம மக்களும் பஞ்சாயத்து நிர்வாகமும் இதனை முறையாக நடத்த நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
நிதிநிலை அறிக்கை
விவசாயி சத்யராஜ்:-
கிராம பஞ்சாயத்து நிர்வாகம் கிராம சபை கூட்டம் எங்கு நடத்தப்படுகிறது என்ற முறையான அறிவிப்பை வெளியிடுவதில்லை. மேலும் கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்படுவதில்லை. இதனால் அதிக கிராம மக்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.
பஞ்சாயத்து நிர்வாகம் தங்களுக்கு தேவையான விஷயங்களை மட்டும் தீர்மானமாக எழுதிக் கொள்கிறார்கள். கிராம மக்களின் தேவையை கண்டு கொள்வதில்லை. மேலும் இதில் கலந்து கொள்ள வரும் அதிகாரிகளும் உரிய முறையில் இதை கண்காணிப்பதில்லை. எனவே அரசு அறிவித்தபடி கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்தி பஞ்சாயத்து நிர்வாகத்தின் நிதிநிலை அறிக்கை திட்ட பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கிராம மக்களின் தேவைகளையும் கேட்டு அறிந்து அதனை நிறைவேற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு அதன் மூலம் கிராம மக்களுக்கு பலன் ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தீர்வு இல்லை
ராஜபாளையம் அருகே கோவிலூரை சேர்ந்த சிவமணி:- பொதுவாக விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் கொடுத்தாலும் சில அதிகாரிகள் செவி கொடுத்து கேட்பதில்லை.
ஆதலால் விவசாயிகள் அடுத்த கட்ட நடவடிக்கையாக கிராம சபை கூட்டத்தை நாடி கோரிக்கை மனு கொடுக்கின்றனர். அங்கும் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை. விவசாயிகளின் நலன்களில் அரசு தனி கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் அதன் ேநாக்கம் நிறைவேறவில்லை.
கண் துடைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுச்சாமி:-
தமிழக அரசு ஆண்டுக்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளில் கிராம சபை கூட்டங்களை நடத்துகிறது. அந்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் கொடுத்தபடியே உள்ளது. ஒரு சில மனுக்களுக்கு மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள், மற்ற மனுக்கள் அனைத்தும் ஒதுக்கப்படுகின்றன.
எனவே இனிவரும் காலங்களில் கிராம சபை கூட்டத்தில் பெறப்படும் மனுக்களை வகைப்படுத்தி வந்த மனுக்களை பதிவு செய்து எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரிகள் மறுமுறை கிராம சபை கூட்டம் நடக்கும் போது அங்கு விளக்கமாக வைக்க வேண்டும். இதன் மூலமே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து தெரிய வரும். கண்துடைப்புக்காக கிராம சபை கூட்டங்களை நடத்தக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
எம்.பி. என்ன சொல்கிறார்?
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கிராம பஞ்சாயத்துக்கள் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டு நிதி மேலாண்மை அதிகாரமும் வழங்கப்பட்டது. மேலும் கிராம மக்களுக்கும், பஞ்சாயத்து நிர்வாகத்திற்கும் இடையே வெளிப்படைத்தன்மையான நிலை இருக்க வேண்டும் என்பதற்காக கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் பல பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் முறையாக நடத்தப்பட்டாலும் ஒரு சில பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவதில் பிரச்சினை இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே கிராம பஞ்சாயத்து தலைவர்கள் எந்த நோக்கத்திற்காக அவர்களுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அதனை முறையாக பயன்படுத்தி கிராம மக்கள் நலனுக்காக வெளிப்படை தன்மையுடன் நிர்வாகத்தை நடத்திட கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்திட வேண்டும். இதன் மூலம் கிராம பஞ்சாயத்து அனைத்து வகைகளிலும் மேம்பட வாய்ப்பு ஏற்படும் என்றார்.