அதிக லாபம் தருகிறதா மீன்பிடி தொழில்?

‘பசியால் வாடுபவனுக்கு ஒரு வேளை உணவு கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவான்', என்பது மேற்கத்திய நாடுகளில் வழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி ஆகும்.;

Update: 2023-03-16 09:24 GMT

அசைவ உணவுகளிலேயே பிரச்சினை இல்லாத, அதிக புரதச்சத்து நிறைந்த உணவு என்றால், அது மீன்கள் தான். அந்தவகையில் கடல்கள், கழிமுகங்கள், ஆறுகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மீன்கள் கிடைக்கின்றன. கடல்சார் மாநிலமான தமிழகம் 1,076 கி.மீ. நீளமுடைய கடற்கரையையும், 41,412 கி.மீ. கண்டத்திட்டு பகுதியையும், 1.9 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்து 2-வது நீளமான கடலோர பகுதிகளை கொண்ட தமிழக கடலோர எல்லை, சென்னை பழவேற்காடு தொடங்கி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி வரை நீண்டிருக்கிறது.

கடலோரத்தில் 14 மாவட்டங்களும், 15 துறைமுகங்களும் கொண்ட தமிழக எல்லையில் 10.48 லட்சம் பேர் பெருங்கடல் பரப்புக்கு சென்று மீன்பிடிக்கும் உரிமைகளையும், 3.60 லட்சம் பேர் உள்நாட்டு மீனவர்களுக்கான உரிமத்தையும் பெற்றிருக்கிறார்கள். அந்தவகையில் தமிழகத்தில் 363 மீன்பிடி நிலையங்களில் ஏறக்குறைய 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உரிமம் பெற்ற மீனவர்களாக இருக்கிறார்கள். தமிழக எல்லையில் பிடிக்கப்படும் மீன்கள், நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 12 சதவீதம் வரை அங்கம் வகிக்கிறது. எடை வலை, வீச்சு வலை, சாட்டு வலை, பெரிய வலை, மணி வலை, பரு வலை, சூடை, மத்தி வலை, நண்டு வலை என மீனவர்கள் பலவகை வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கிறார்கள்.

தமிழக எல்லையில் சங்கரா, அயிலா, வஞ்சீரம், கிளிச்சை, கிழங்கான், வவ்வால், மத்தி, சீலா, பாறை, கவளை, நெத்திலி, கட்லா, ரோகு, தும்புலி, சுறா, வாளை, கொருக்கை, கடம்பா, நண்டு (பல ரகங்களில்), இறால் (பல ரகங்களில்) உள்ளிட்ட பல வகை மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

மாநிலத்தின் உணவு உற்பத்தியில் மீன்வளம் முக்கிய பங்கை வகிக்கிறது. பெருவாரியான மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பின் முக்கிய அம்சமாகவும் மீன்பிடி தொழில் கருதப்படுகிறது. பாரம்பரிய வாழ்வாதாரமாக தொடங்கிய மீன்பிடி தொழில், தற்போது வணிக முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை தொழிலாகவும் மாறி போயிருக்கிறது. மத்திய-மாநில அரசுகளின் பொருளாதாரம், வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்குதல், அன்னிய செலாவணி ஈட்டுதலில் முக்கிய பங்கையும் மீன்பிடி தொழில் ஈடுசெய்கிறது.

2019-20-ம் ஆண்டில் நாட்டின் மொத்த மீன் உற்பத்தி 14.16 மில்லியன் டன் ஆகும். நாட்டின் மொத்த கடல் மீன் உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது.

2019-20-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த மீன் உற்பத்தி 7.57 லட்சம் டன் ஆகும். கடல் உணவு ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ள நிலையில், நாட்டின் மொத்த கடல் உணவு ஏற்றுமதியில் தமிழகம் குறிப்பிடத்தக்க பங்கை தொடர்ந்து வழங்கி வருகிறது.

2020-21-ம் ஆண்டில் நாட்டின் மொத்த கடல் உணவு ஏற்றுமதி ரூ.43 ஆயிரத்து 717 கோடி அளவில் அமைந்தது. அதாவது 11.49 லட்சம் டன் மீன் உற்பத்தி நடந்தது. இதில் தமிழகம் 1.10 லட்சம் டன் கடல் பொருட்கள் ஏற்றுமதி மூலமாக ரூ.5 ஆயிரத்து 565 கோடி அன்னிய செலாவணியை ஈட்டியது.

தற்போது மீன்பிடி தொழில் வெகுவாக முன்னேற்றம் அடைந்த நிலையில், தமிழக ஏற்றுமதி அளவு உச்சத்தை எட்டியிருக்கிறது. அந்தவகையில் கடல் பகுதியில் 1.93 லட்சம் டன், உள்நாட்டில் 5.95 லட்சம் டன் என, 2021-22-ம் ஆண்டில் கடல் பொருட்கள் ஏற்றுமதி மூலமாக ரூ.10 ஆயிரத்து 635 கோடி அன்னிய செலாவணியை ஈட்டி சாதனை படைத்திருக்கிறது. அந்தவகையில் இந்திய அளவில் தமிழகம் 4-வது இடத்திலும் (பெருங்கடல் வழி), உள்நாட்டு உற்பத்தியில் 7-வது இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் தனிநபர் மீன் உண்ணும் விகிதம் ஆண்டுக்கு 11.60 கிலோ என்று இருக்க வேண்டிய நிலையில், அது 9.83 கிலோ அளவில் மட்டுமே உள்ளது. தற்போது தனிநபர் மீன் உண்ணும் விகிதம் மீண்டும் உயர தொடங்கியிருக்கிறது. மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து மீன்வள ஆதாரங்களிலும் மீன் உற்பத்தியை அதிகரித்திட வேண்டிய தேவை உள்ளது.

கிராமப்புற பகுதிகளில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மற்றும் வருவாய் ஈட்டுவதற்குமான முக்கிய தொழிலாக வளர்ந்துள்ளது. வேளாண்மையுடன் மீன் வளர்ப்பினை ஒருங்கிணைந்து செய்யப்படும் தொழில் நுட்பமானது, மீன்வளர்ப்பு மற்றும் அதன் உற்பத்தியை அதிகரிப்பது தெரியவந்திருக்கிறது. வருங்காலங்களில் உள்நாட்டு மீன் உற்பத்தியை 3 மடங்கு உயர்த்திடவும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

நன்னீர், உவர்நீர் மற்றும் கடல்வள ஆதாரங்களின் மூலம் மீன் உற்பத்தி அதிகரிப்பு, அரசு மீன் பண்ணைகள், மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், தொடர் குளிர்காப்பு, மதிப்பு கூட்டுதல் என வணிக ரீதியிலான நடவடிக்கைளை மேம்படுத்த தமிழக அரசும் தொடர் திட்டங்களை அறிவித்து வருகின்றன. மீன் வளர்ப்பின் மூலமாக ஊரக பகுதியில் கூடுதல் வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டு வருகிறது.

மீன்களை போல கருவாடு ஏற்றுமதியும் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. அந்தவகையில் ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தியில் 7 முதல் 11 சதவீதம் வரை கருவாடு தளத்தில் குறிப்பிடத்தக்க அன்னிய செலாவணியை தமிழகம் ஈட்டுகிறது. தமிழகத்தில் ராமேசுவரம், நாகை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ருசியான, தரமான கருவாடு தயாரிப்பு தொழில் அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதிகளில் தயாரிக்கப்படும் கருவாடுகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. குறிப்பாக, இப்பகுதிகளில் தயார் செய்யப்படும் நெய் மீன் கருவாடு அதிகளவில் 'ஆர்டர்' எடுக்கப்படுகிறது. இதையெல்லாம் ஒப்பிடுகையில் மீன்பிடி தொழில் லாபம் மிகுந்ததாகவே பார்க்கப்படுகிறது.

அதேவேளை சில அபாயங்களையும் மீனவர்கள் சந்திக்க வேண்டியதுள்ளது. ஒரு நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் அதாவது 22.2 கி.மீ. தூரம் வரையிலான கடற்பரப்பு, அந்த நாட்டின் கடல் எல்லை ஆகும். ஆனால் பல்வேறு காரணங்களால் தெரிந்தோ, தெரியாமலோ எல்லை தாண்ட நேருகையில் மீனவர்கள் பல்வேறு துயரங்களை எதிர்கொள்கிறார்கள். அந்தவகையில் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீசன்களுக்கு ஏற்ப மீன்பிடி தொழில்



பொதுவாகவே குறிப்பிட்ட சீசன்களில் குறிப்பிட்ட ரக மீன்கள் நமக்கு கிடைக்கின்றன. இதுகுறித்து தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் கு.பாரதி, துணை பொதுச்செயலாளர் ஆர்.ராஜமாணிக்கம் கூறியதாவது:-

கடலில் நீரோட்டத்தின் மாறுபாடுக்கு ஏற்ப, குறிப்பிட்ட சீசன்களில் மீன்கள் நமக்கு கிடைக்கின்றன. ஜனவரி முதல் மார்ச் மாத காலகட்டத்தில் கவளை, அயிலா மீன்கள் எளிதாக கிடைக்கும். தூண்டில் மூலம் கொமர பாறை மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன. பட்டு பஞ்சு எனப்படும் மினுமினுக்கும் பஞ்சை கட்டி இந்த வகை மீன்களை பிடிப்போம். நாகை முதல் சென்னை வரையிலான கடல் எல்லையில் பல்லங்கண்டல் என்ற மீன் அதிகம் பிடிபடும். இது 1 அடி முதல் 3 அடி நீளம் இருக்கும். ஆழ்கடலில் மட்டுமே இவை காணப்படும். இந்த காலகட்டத்தில் நீரோட்டம் இருக்காது என்பதால் எளிதில் பிடிக்கலாம்.

அடுத்து வரும் 2 மாதங்களில் (ஏப்ரல், மே) இறால் அதிகம் பிடிக்கப்படும். அதேபோல கத்தழை, வண்ணான், காரை ரக மீன்களும் எளிதாக கிடைக்கும். ஜூன் வரையிலும் இந்த நிலை தொடரும்.

ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மத்தி ரக மீன்கள் நிறைய கிடைக்கும். எடை வலை கொண்டு பெருமளவில் இந்த மீன்கள் கொண்டுவரப்படும். ஏழை, நடுத்தர மக்கள் நிறைய வாங்குவார்கள் என்பதால் இந்த மீன்கள் வருமானம் ஈட்டும் மீன்களாகும். செப்டம்பர் மாதத்தில் வாளை மீன்கள் கிடைக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் காலகட்டத்தில் அனைத்து ரக மீன்களும் (நீரோட்ட தன்மைக்கேற்ப) கலவையாக கிடைக்கும்.

சென்னை எல்லையில் பிடிக்கப்படும் மீன்கள், மக்கள் தேவைக்கேற்ப இருக்காது. எனவே தான் வெளிமாநிலங்களில் இருந்தும் மீன்கள் வரத்து வரவழைக்கப்படும். குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் கிடைக்காத மீன்கள் இதர மாநிலங்களில் கிடைக்கும். அந்த சமயம் அந்த மீன்கள் அங்கிருந்து தமிழக மார்க்கெட்களுக்கு கொண்டுவரப்படும். அதேபோல தேவைக்கேற்ப இங்கிருந்தும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் இறால் உற்பத்தி



தமிழகத்தில் உவர்நீர் மூலம் நடைபெறும் இறால் உற்பத்தி குறித்து மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் பி.மகாலட்சுமி, எம்.குமரன் ஆகியோர் கூறியதாவது:-

உவர்நீர் இறால் உற்பத்தியை பொறுத்தவரையில் தேசிய சராசரி உற்பத்தி திறன் அளவு ஒரு ஹெக்டேருக்கு 5 ஆயிரம் கிலோ முதல் 6 ஆயிரம் கிலோ வரை வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. அந்த அனுமதிக்கப்பட்ட வரையறை அளவுக்கேற்ப, தமிழகத்தில் இறால் உற்பத்தி நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த அளவு வெகுவாக குறைந்திருக்கிறது.

காரணம், அந்த மாநிலங்களில் இன்னும் பாரம்பரிய முறையின் அடிப்படையிலேயே (அதாவது, பெரும் அலையாக வரும் இறால், மீன் குஞ்சுகளுடன் கூடிய கடல்நீரை தேக்கிவைத்து, உற்பத்தியை கையாளுவது) உவர்நீர் இறால் உற்பத்தி கையாளப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய திட்டங்கள், உவர்நீர் இறால் உற்பத்தியை அதிகரிக்க செய்திருக்கின்றன. எங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முடிவுகள் குறித்து அவ்வப்போது மாநில அரசுடனும் கலந்துகொள்ளப்படுகிறது. ஏனெனில் மாநில அரசின் மீன்வளம் மிக முக்கியம் ஆகும். அந்தவகையில் மாநில அரசுடன் புதிய மீன்வள திட்டங்களிலும் நாங்கள் கைகோர்த்து செயல்படு கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையங்கள் சென்னையில் முட்டுக்காடு, கோவளத்தில் செயல்படுகின்றன. மேலும், இதன் மண்டல ஆராய்ச்சி மையங்கள் கொல்கத்தாவின் காக்தீப்பிலும், குஜராத்தின் நவ்காரி பகுதியிலும் செயல்படுகின்றன.

மீன்பிடி தடைக்காலம்

வங்கக்கடலில் ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் மீன்பிடி தடைக்காலம் 45 நாட்கள் என்று தான் இருந்தது. பின்னர் 61 நாட்களாக உயர்த்தப்பட்டது.

இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதேவேளை கரையோரம் சிறிய படகுகளில் மீன்பிடிக்க (கட்டுப்பாடுகளுடன்) அனுமதி வழங்கப்படுகிறது. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி ஒவ்வொரு மீனவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரிசெய்தல், வலைகள் பின்னுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

Tags:    

மேலும் செய்திகள்