விவசாயி அடித்து கொலையா?

விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-05 18:45 GMT

பொம்மனப்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 58), விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில் இறந்து கிடப்பதாக பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அன்பழகன் அதே பகுதியில் பிரச்சினைக்குரிய காலி இடத்தில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அன்பழகனின் அண்ணன் மாரிக்கண்ணுவின் மகன்கள் பிரகாஷ் (40), இளவரசன் (30) மற்றும் சந்திரசேகர் (26) ஆகியோர் வயலில் இருந்த அன்பழகனிடம் பிரச்சினைக்குரிய இடத்தில் ஏன் வீடு கட்டுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதில் அன்பழகன் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தள்ளு, முள்ளுவில் காயம் ஏற்பட்டதாக பிரகாஷ், இளவரசன், சந்திரசேகர் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையடுத்து, மருத்துவமனையில் உள்ள பிரகாஷ், இளவரசன், சந்திரசேகரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தள்ளு, முள்ளுவில் கிணற்றில் தவறி விழுந்ததில் அன்பழகன் இறந்தாரா? அல்லது அண்ணன் மகன்கள் அன்பழகனை அடித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்