செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி தரப்படுமா?
நாகை மாவட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்க அனுமதி தரப்படுமா? என்று தொழிலாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்க அனுமதி தரப்படுமா? என்று தொழிலாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
செங்கல் தயாரிக்கும் பணி
நாகை மாவட்டம் சிக்கல், ஒரத்தூர், கீழையூர், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செங்கல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெயில் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களை கணக்கில் கொண்டு அதிகளவில் செங்கல் தயாரிக்கப்படும். கோடைக்காலம் ஆரம்பித்து விட்டதால் நாகை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த காலமே செங்கல் தயாரிப்பதற்கு ஏற்றகாலமாகும்.
தற்போது நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் செங்கல் தயாரிப்புக்கு மூலதனமான செம்மண், களிமண் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மண் எடுக்க உரிய ஆவணங்களுடன் அனுமதி கேட்டு பல மாதங்கள் ஆகியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. எனவே செங்கல சூைளக்கு மண் எடுக்க அதிகாரிகள் அனுமதிப்பார்களா? என்று தொழிலாளர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நாட்டு செங்கல்
இதுகுறித்து வேதாரண்யத்தை சேர்ந்த செங்கல் சூளைஉரிமையாளர் அகிலன் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:- நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் உப தொழிலாக செங்கல் சூளைகள் வைத்து நாட்டு செங்கல் தயாரித்து வருகின்றனர். கோடை காலத்தில் விவசாயம் இல்லாத போது செங்கல் தயாரிப்பில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் வேதாரண்யம் தாலுகாவை பொறுத்தவரை நாட்டு செங்கல் தயாரிப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கிறது. தற்போது நாட்டு செங்கல் தயாரிக்க தேவைப்படும் செம்மண், களிமண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விைல குறையும்
இதற்கான மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் சொல்லும் உரிய ஆவணங்கள் எங்களிடம் இருந்தும் கூட, தாலுகா அளவில் அனுமதி கிடைக்காமல் உள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான் இந்த நாட்டு செங்கல் தயாரிக்க முடியும். கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் விழுந்த மரங்களை விரகுகளாக வைத்துள்ளோம்.
தற்போது வெளி மாவட்ட செங்கல் ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எங்களுக்கு உரிய அனுமதி கிடைத்து நாங்கள் உற்பத்தியை தொடங்கினால், செங்கல் விலை குறையும். மாவட்டத்தில் நடந்து வரும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு எங்களால் ரூ.6 வரை குறைந்த விலையில் செங்கல் கொடுக்க முடியும் என்றார்.
கோடை மழை
திருமருகலில் செங்கல் சூளை நடத்தி வரும் சிவராமன் கூறுகையில், நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளை தொழில் செய்து வருகின்றோம். மேலும் திருமருகல் ஒன்றியத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றாக செங்கல் சூளை தொழில் உள்ளது. வெயில் காலங்களில் தான் எங்களுக்கு வேலை இருக்கும்.
கோடை மழை பெய்யும் போது தயாரித்த செங்கல்கள் கடுமையாக பாதிக்கப்படும். அப்போது பெரிய அளவிலான தார்ப்பாய்களை பயன்படுத்தி செங்கலை மூடி வைப்போம். இருந்தும் மழை நீரில் செங்கல்கள் கரைந்து விடும்.
உரிய நிவாரணம்
மழை காலங்களில் செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். குறிப்பாக முன்பணம் பெற்றுக்கொண்டு செங்கல் சூளை அருகே குடிசைகளை அமைத்து வேலை செய்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்களுக்கு, வேலை இல்லாத நாட்களில் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலை ஏற்படும். அவர்களை கண்டறிந்து வேலையில்லாத நாட்களில் நிதி உதவி வழங்க வேண்டும் என்றார்.