சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?

இதுபற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

Update: 2023-06-25 18:45 GMT

பலருடைய செல்போன்களிலும் அடிக்கடி கேட்கும் உரையாடல் இதுதான்.

'பேங்க் மேனேஜர் பேசுறேன் சார், உங்கள் ஏ.டி.எம். கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், ஏன் இணைக்காமல் இருக்கிறீங்க?, ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும் சார். ஏ.டி.எம். கார்டை கையில் எடுங்கள். என்ன பேங்க் கார்டு வைக்கிறீங்க, ஸ்டேட் பேங்கா, இந்தியன் பேங்கா, கனரா பேங்கா?. என்பார்கள்.

சந்தேகமடைந்த நபர் நீங்கள் எந்த பேங்க் மேனேஜர் சார் பேசுறீங்க?...ஸ்டேட் பேங்கில் இருந்து பேசுகிறேன், உங்கள் ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும், கார்டு மேலே உள்ள 16 நம்பரை மெதுவா சொல்லுங்க சார்' என்பார்.

இணைய மோசடி

வடமாநிலங்களை சேர்ந்த சிலர் தமிழகத்தில் உள்ள செல்போன் எண்களில் இதுபோன்று பேசி பணத்தை திருடி விடுகின்றனர். இணையதளம் மூலம் மோசடி பேர் வழிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது ஆசை வார்த்தைகளை பேசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள்.

இதுபோன்று பல வடிவங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் கொரோனா காலத்தில் அதிகரித்து காணப்பட்டது. தற்போதும் இக்குற்றங்கள் நாடெங்கிலும் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகம் இந்த குற்ற அளவுகளில் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பொது முடக்கக் காலமான 2020-ம் ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில், 11 ஆயிரத்து 97 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கிரிப்டோ மோசடியும் தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

இதுபற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் கூறிய விவரம் வருமாறு:-

நடுத்தர மக்கள் இலக்கு

தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஜி.கே.தினேஷ் கூறும் போது, 'சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் மக்களிடம் படிப்படியாக மனிதநேயம் குறைந்து, எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் உருவாவதும் ஒரு காரணமாகும். வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடி பணம் எடுத்து விட்டார்கள், ரூ.50 லட்சம் எடுத்துவிட்டார்கள் என்றெல்லாம் கேள்விப்படவில்லை. மாறாக ரூ.5 லட்சத்திற்கு கீழ் பணத்தை எடுத்துவிட்டதாகத்தான் கேள்விப்படுகிறேன். அப்படியானால் நடுத்தர மக்களை இலக்காக வைத்து இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன. பொதுவாகவே நமது பிறந்த தேதி மற்றும் செல்போன் எண்ணை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அதேபோல் ஆதார் கார்டையும் எவரிடமும் தர வேண்டாம். எனவே எண்கள் மற்றும் நமது சுயவிவரங்கள் இல்லாமல் வழங்கப்படும் 'மாஸ்க்ட் ஆதார் கார்டை' அனைவரும் பயன்படுத்த வேண்டும். அரசு சம்பந்தமானவற்றுக்கும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் இ-மெயில் முகவரியும் இரண்டு வைத்து கொள்ள வேண்டும். வங்கிகளுக்கு ஒன்றும், பிற வகைகளுக்கு ஒன்றும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மோசடிகளை தடுக்க முடியும்' என்றார்.

பாதுகாப்பான இணையதள முகவரி

நாமக்கல்லை சேர்ந்த வக்கீல் மனோகரன்:-

ஆன்லைன் பரிமாற்றம் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை பயன்படுத்தி சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலும் இணையதளத்தில் தேவையில்லாத லிங்க்குகளை கவனக்குறைவாக பயன்படுத்தும் போது நாம் மோசடிக்கு உள்ளாகிறோம். பாதுகாப்பான இணையதள முகவரிகளை பயன்படுத்தும் போது எந்த பிரச்சினைகளும் ஏற்படுவதில்லை.

கொரோனா காலத்தில் இருந்தே சைபர் குற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவற்றை குறைக்க போலீசார் பொதுமக்களிடையே அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் சைபர் கிரைம் குற்றங்களை தொடர்ந்து செய்து வருபவர்களை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

ஆதார் கொடுக்க வேண்டாம்

எருமப்பட்டியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் கவுதம்:-

நடுத்தர மக்களை இலக்காக வைத்து இதுபோன்ற சைபர் குற்றங்கள் நடத்தப்படுகின்றன. பொதுவாகவே நமது பிறந்த தேதி மற்றும் செல்போன் எண்ணை எவரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அதேபோல் ஆதார் கார்டையும் எவரிடமும் கொடுக்க வேண்டாம். இ-மெயில் முகவரியும் இரண்டு வைத்து கொள்வது சிறந்தது. வங்கிகளுக்கு ஒன்றும், பிற வகைகளுக்கு ஒன்றும் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மோசடிகளை தடுக்க முடியும்.

ஆன்லைன் விளையாட்டே ஒரு வகையில் மோசடி செயல் தான். எனவே ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்

வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூரை சேர்ந்த வெற்றிவேல்:-

சைபர் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காததே ஆகும். மேலும் இக்குற்றங்களில் ஈடுபட்டு, வழக்கு கோர்ட்டுக்கு சென்றால், தீர்ப்பு வருவதற்கு 15 முதல் 20 ஆண்டுள் வரை ஆகின்றன. மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றத்தில் தண்டனை கொடுக்கப்பட்டால், மாவட்ட நீதிமன்றம், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு என்று மேல்முறையீடு செய்ய பல வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக கூட்டுச் சேர்ந்து சைபர் குற்றங்களில் ஈடுபவர்கள் மீது ஓரிரு மாதங்களில் தண்டிக்கப்பட கூடிய அளவுக்கு சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோல் செய்தால் தான் குற்றங்கள் குறையும். மேலும் வங்கிகளில் தற்போது பணமில்லா பரிவர்த்தனை என்ற நிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில் நம் இந்தியாவில் அனைவரும் படிப்பறிவு உள்ளவர்கள் என்று கூற முடியாது. படிப்பறிவு அற்றவர்களும் வங்கியில் கணக்கு வைத்து உள்ளார்கள். வங்கி கணக்கு என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக உள்ளது. இவர்களிடம் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எளிதில் அணுகி, அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகின்றனர்.

விழிப்புணர்வு இல்லை

சமூக ஆர்வலர் பாச்சல் சீனிவாசன்:-

தற்போது ஆன்லைனில் விளம்பரம் செய்து, மக்களுக்கு நேரடியாக பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆன்லைனில் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மக்களை ஈர்ப்பதற்காக பொருட்களின் விலையை குறைத்து கொடுக்கின்றன. கடைகளில் வாங்கும் விலைக்கும், ஆன்லைனில் வாங்குவதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்தப்படுகிறது.

அந்த கணக்கில் இருந்து பணம் திருட்டு போவதும் சமீபகாலமாக நடந்து வருகிறது. சைபர் குற்றம் நடந்தால், மாவட்ட அளவில் புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு இல்லை. எனவே அரசு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சைபர் கிரைம் பிரிவை தொடங்க வேண்டும். அப்போது தான் குற்ற செயல்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடனடியாக தண்டனை பெற்று தந்தால் தான் குற்றங்கள் குறையும்.

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன்:-

சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சமீபகாலமாக வேலை தேடும் இளைஞர்களை குறித்து வைத்து பணம் மோசடி செய்து வருகின்றனர். இதேபோல் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், பெண்கள் என வெவ்வேறு வகைகளில் பணமோசடியில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக காவல்துறை சார்பில் சிறிய, சிறிய வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

சைபர் குற்றங்களை பொறுத்த வரையில் நடைபெறாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் வெளிமாநிலங்களில் இருந்து செயல்படுவதால், அவர்களை கைது செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மோசடி செய்த பணத்தை உடனடியாக பிற வங்கி கணக்கிற்கு மாற்றி விடுவார்கள். எனவே பொதுமக்கள் தான் சைபர் குற்றவாளிகளிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 18 சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டு, மோசடி செய்த பணம் மீட்கப்பட்டு உள்ளன. இதுவரை பதிவான வழக்குகளில் 30 சதவீத வழக்குகளில் மட்டுமே மோசடி பணம் மீட்கப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

சைபர் கிரைம் உதவி எண்

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர் யாரும் அது குறித்து புகார் தெரிவிக்க அச்சப்பட தேவையில்லை. ஒருவர் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டிருந்தால் உடனே 'தேசிய சைபர் கிரைம் உதவி எண் –'155260' புகார் தெரிவிக்கலாம். அதுவும் 24 மணி நேரத்துக்குள் புகார் அளித்தால், மோசடி நபரின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம். இக்குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு www.cybercrime.gov.in என்ற வலைத்தளத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, விபத்து நடந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாகப் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிரைக் காப்பாற்றுகிறோமோ, அதேபோல், சைபர் குற்றம் நடந்த 48 மணி நேரத்துக்குள் தகவல் கொடுத்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும்.

விழிப்புணர்வு வீடியோ

ஆன்லைனில் பணம் இழந்து விட்டீர்களா?. ஓடிபி மூலம் மோசடியா?, கடன் செயலி மூலம் மோசடியா?, கிரெடிட் கார்டு மோசடியா?, மின்னணு வணிக தளங்கள் மூலம் மோசடியா?, பதற்றம் வேண்டாம், 1930 எண்ணை அழையுங்கள் அல்லது www.cybercrime.gov.inஎன்ற இணையதள முகவரியில் புகார் செய்யலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இணையவழி குற்ற விழிப்புணர்வு வீடியோவை தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவினர் வெளியிட்டு உள்ளனர். இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்