தண்டவாளத்தின் ஓரத்தில் இரும்பு தடுப்புகள்

மதுக்கரை அருகே காட்டு யானைகள் வெளியே வருவதை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் 3½ கி.மீட்டர் தூரம் இரும்பு தடுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2023-10-04 00:15 GMT


மதுக்கரை அருகே காட்டு யானைகள் வெளியே வருவதை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் 3½ கி.மீட்டர் தூரம் இரும்பு தடுப்புகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்டு யானைகள்

கோவையை அடுத்த மதுக்கரையில் இருந்து வனப்பகுதி வழியாக ரெயில் தண்டவாளம் கேரளாவுக்கு செல்கிறது. இதில் எட்டிமடை அருகே தண்டவாளம் உயரமாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சிரமமாக இருந்து வருகிறது.

இதனால் அடிக்கடி ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது. அதைத்தடுக்க மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக தற்போது காட்டு யானைகள் மிகவும் எளிதாக கடந்து சென்று வருகிறது.

நிரந்தர நடவடிக்கை

இதுபோன்று மற்றொரு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் அந்தப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு காட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுக்கரையில் இருந்து எட்டிமடை வரை காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இந்த யானைகள் தண்டவாள பகுதியை கடந்துதான் வரவேண்டும். எனவே தண்டவாளத்தை கடந்து வருவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

3½ கி.மீ. தூரம் இரும்பு தடுப்பு

மதுக்கரை ரெயில் நிலையம் அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை அருகே வரை 3½ கி.மீ. தூரத்துக்கு காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடந்து ஊருக்குள் புகுந்து விடுகிறது.

எனவே இதை தடுக்க இந்த 3½ கி.மீ. தூரத்துக்கும் தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணி நடந்து வருகிறது. ஏற்கனவே மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் ஒரு கி.மீ. தூரத்துக்கு இதுபோன்ற இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நல்ல பலன் கிடைத்து உள்ளது.

அரசுக்கு அறிக்கை

எனவே இதற்கு எவ்வளவு செலவாகும் என்பது தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு வந்து, நிதி ஒதுக்கப்பட்டதும் ரெயில்வே மூலம் தண்டவாளத்தின் ஓரத்தில் இரும்பு கம்பிகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்