அயர்லாந்து பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு
சாத்தனூர் அருகே மர்மமான முறையில் இறந்த அயர்லாந்து பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு 2 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
தண்டராம்பட்டு
சாத்தனூர் அருகே மர்மமான முறையில் இறந்த அயர்லாந்து பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு 2 மணி நேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
அயர்லாந்து பெண்
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் ரஷிய நாட்டை சேர்ந்த ஒருவர் இடம் வாங்கி பண்ணை வீடு கட்டி வசித்து வந்தார்.
அவர் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் அந்த பண்ணை வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அனார் லூசார்டி (வயது 72) என்பவர் தனியாக வசித்து வந்தார்.
இவர் பாதுகாப்புக்காக மூன்று நாய்களையும் உடன் வளர்த்து வந்தார். இவரை அங்குள்ள கிராம மக்கள் மீனாட்சி அம்மாள் என அழைத்து வந்தனர்.
இவருக்கு தேவையான பழம், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்பவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்து வாங்கி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வழக்கம் போல் ஹரி அவரை பார்க்க சென்றார். அப்போது வீட்டில் இருந்த நாய்கள் தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஹரி உள்ளே சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
உடனே ஹரி மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உதவியுடன் அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் பண்ணை வீட்டு வளாகத்தில் புதைத்தனர்.
போலீஸ் விசாரணை
இறந்த அயர்லாந்து பெண்ணின் இறப்புச் சான்றுக்காக ஹரி நெடுங்கவாடி கிராம நிர்வாக அலுவலரை அணுகி உள்ளார்.
இறந்த பெண் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் வருவாய்த்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்
அதன்பேரில் செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வெற்றிவேல், தாசில்தார் அப்துல் ரகூப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அயர்லாந்து பெண் புதைக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர்.
அனார் லூசார்டி இறந்த தகவலை போலீசார் அயர்லாந்தில் உள்ள அவரது சகோதரருக்கு தெரிவித்தனர் மேலும் சாவில் சந்தேகம் இருப்பதால் இந்தியாவிற்கு வந்து பிரேத பரிசோதனை செய்ய புகார் கடிதம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அவர் தற்போது இந்தியாவிற்கு வருவதற்கான சூழ்நிலை இல்லாததால் அங்கு இருந்த வண்ணமே பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்ததாக தெரிகிறது.
பிணம் தோண்டி எடுப்பு
இதைத்தொடர்ந்து இன்று பகல் 3.30 மணியளவில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வெற்றிவேல், தாசில்தார் அப்துல் ரகூப் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
இந்த பிரேத பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. 3.30 மணிக்கு தொடங்கிய இந்த பரிசோதனை 5.30 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது
இந்த பிரேத பரிசோதனையை காண்பதற்கு ஏராளமான மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் குவிந்திருந்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்து அதே இடத்தில் பிணம் புதைக்கப்பட்டது. மேலும் சில முக்கிய உடல் கூறுகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அயர்லாந்து பெண்ணை புதைப்பதற்கு உதவிய அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களிடமும் ஹரியிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.