ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-05-03 06:32 GMT

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 6-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்தனர். டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்க, மாற்றுத்திறனாளிகளுக்கு தனிவரிசை அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்