கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் விசாரணை
சிதம்பரம் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்களின் குடும்பத்தில் குழந்தை திருமணம் நடப்பதாக தொடர் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமணம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். அப்போது சிறுமிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி ஒன்றில், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் சமூக நலத்துறை அதிகாரிகள் அவர்கள் மீது குழந்தை திருமண குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
கவர்னர் பேட்டிக்கு மறுப்பு
மேலும் அவர்களது உறவினர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்ததுடன் 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்திருந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கவர்னரின் பேட்டிக்கு மறுப்பு தெரிவித்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சிதம்பரத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளில் 2 பேருக்கு மட்டும் பெண் டாக்டர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது எனவும், இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு சிறுமிகள் உட்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.
சிதம்பரத்தில் விசாரணை
இந்த நிலையில் சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரக கூடுதல் இயக்குனர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, இளநிலை நிர்வாக அதிகாரி கமலக்கண்ணன், கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பரமேஸ்வரி ஆகியோர் நேற்று காலை 10.30 மணி அளவில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியிடம், குழந்தை திருமணம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது?, அதில் எந்தெந்த வழக்குகளில், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும் குழந்தை திருமணம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
பரிசோதனை விவரம்?
சுமார் ½ மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், மருத்துவ குழுவினர் கடலூர் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மதியம் 1.15 மணி அளவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த மருத்துவ குழுவினர், அங்கு மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்றனர். இதையடுத்து சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நாளில் பணியில் இருந்த டாக்டர்கள் யார்?, சிறுமிகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனை விவரம்?, எத்தனை சிறுமிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது?, அவர்களுக்கு இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா?, என விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.
தொடர்ந்து மருத்துவ குழுவினர், சமூக நலத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர். சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.