போலீஸ்காரரிடம் தீவிர விசாரணை
தேவகோட்டை இரட்டைக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக போலீஸ்காரரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.;
தேவகோட்டை
தேவகோட்டை இரட்டைக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக போலீஸ்காரரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இரட்டைக்கொலை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி 11-ந் தேதி இரவு தாய், மகள் ஆகியோரை படுகொலை செய்து வீட்டில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் 13 வயது சிறுவனை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரையின் நேரடி கண்காணிப்பிலும், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையிலும் 8 தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ்காரர்
இந்நிலையில் திடீர் திருப்பமாக போலீசார் விசாரணையில் போலீஸ்காரர் ஒருவரின் கார் இந்த கொலையில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த போலீஸ்காரர் தற்போது போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது காரை எடுத்து இரவு முழுவதும் ஓட்டிய முக்கிய நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த காரில்தான் கொள்ளையர்கள் தப்பினரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த போலீஸ்காரருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்காக நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர்.
பரபரப்பு
அதன்பேரில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். இன்ஸ்பெக்டர் சரவணன் அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினார். அதேபோல் மேலும் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் தற்போது திடீர் திருப்புமுனை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது தேவகோட்டை பொதுமக்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறை வட்டாரங்களிலும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.