2-வது நாளாக போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

கிருஷ்ணகிரியில் பெண்ணை கொன்று பணம், நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 2-வது நாளாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2023-03-31 18:45 GMT

கிருஷ்ணகிரியில் பெண்ணை கொன்று பணம், நகையை கொள்ளையடித்து சென்ற வழக்கில் 2-வது நாளாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

பெண் கொலை

கிருஷ்ணகிரி அடுத்த தொன்னையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 51). கணவரை இழந்தவர். நேற்று முன்தினம் இவர் வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சரஸ்வதிக்கு பழையபேட்டையில் நிலம் ஒன்று இருந்ததும், அதை ரூ.35 லட்சத்திற்கு விற்று பணத்தை வீட்டில் வைத்து இருந்ததும், அந்த பணத்தையும், அவர் அணிந்திருந்த நகையையும் கொள்ளையடிக்க இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேற்று முன்தினம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

3 பேரிடம் விசாரணை

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் அங்கு முகாமிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். சரஸ்வதியின் செல்போனுக்கு யாரெல்லாம் பேசினார்கள். இரவு அந்த பகுதிக்கு யாரும் வந்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த கொலை தொடர்பாக லாரி டிரைவர் ஒருவர் உள்பட 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்