கிருஷ்ணகிரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

Update: 2023-02-15 18:45 GMT

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

கார் சிலிண்டர் வெடிப்பு

கோவை ஈஸ்வரன் கோவில் அருகில் கடந்த 23.10.2022 அன்று காரில் சிலிண்டர் வெடித்தது. இதில் ஒருவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் பிரஷர் குக்கர் குண்டு கடந்த 19.11.2022 அன்று வெடித்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் பொதுமக்கள் கூடும் இடத்தில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இந்த 2 வழக்குகள் தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்தனர்.

அதிரடி சோதனை

இந்த வழக்குகள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 40 இடங்களில் சோதனை நடத்தினார்கள். அதில் கிருஷ்ணகிரியும் ஒன்றாகும். இந்த வழக்கில் தொடர்புடைய உமர் பாரூக் என்பவர் கிருஷ்ணகிரியில் நெசவுக்கார தெருவில் உள்ள ரபீக் (39) என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்து உள்ளார். இதை புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து அவரது வீட்டில் நேற்று அதிகாலை அதிரடியாக புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை ஆய்வுக்காக தேசிய புலனாய்வு அமைப்பினர் எடுத்து சென்றனர். மேலும் அடுத்து விசாரணைக்கு அழைக்கும்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர்கள் கூறி சென்றார்கள். தேசிய புலனாய்வு அமைப்பினர் கிருஷ்ணகிரியில் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்