தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு

பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்தது.

Update: 2023-07-05 19:45 GMT

வால்பாறை

பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர் மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சோலையாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்தது.

பருவமழை தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, கருமலை ஆறு, சோலையாறு சுங்கம் ஆறு மற்றும் கருமலை இறைச்சல் பாறை ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இது தவிர நீர்வீழ்ச்சிகள், தடுப்பணைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நீர்மட்டம் உயர்வு

இதற்கிடையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 47 அடியை எட்டியது. கடந்த ஆண்டு இதே நாளில் 126 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி 32 அடியாக இருந்தது. இதனால் ஒரே நாளில் 15 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக நேற்று வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிளாஸ்டிக் போர்வைகளை கொண்டு மூடியபடி பணியாற்றியதை காண முடிந்தது. சில எஸ்டேட்டுகளில் மதியம் 2 மணிக்கு பிறகு தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டரின் உத்தரவின்பேரில் அனைத்து துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் பேரிடர் மீட்பு படையினருக்கு மீட்பு பணியில் ஈடுபட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. .

குரங்கு நீர்வீழ்ச்சி

இதேபோன்று பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் ஒருசில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இது தவிர இரவு நேரத்தில் மின்சாரமும் அடிக்கடி தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இது தவிர மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக பொள்ளாச்சி அருகே ஆழியாறில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்