ஐ.என்.டி.யு.சி. ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஐ.என்.டி.யு.சி. ஆலோசனை கூட்டம் நடந்தது.;
தூத்துக்குடி மாவட்ட ஐ.என்.டி.யு.சி. ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். மாநில ஐ.என்.டி.யு.சி. துணைத்தலைவர் கதிர்வேல் வரவேற்று பேசினார். தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. தலைவர் வி.ஆர்.ஜெகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், தமிழகத்தில் 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளில் நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், தமிழகத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க தொழிற்சாலைகளை நிறுவி வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், இந்தியா முழுவதும் பெரிய துறைமுகங்களில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்காக தனியார் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு துறைமுக சம்பள பேச்சுவார்த்தையின்படி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில அமைப்பு செயலாளர் கே.பெருமாள் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.