உளுந்து தேவை தன்னிறைவு அடைய புதிய ரகம் அறிமுகம்
உளுந்து தேவை தன்னிறைவு அடைய புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விருதுநகர் விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.;
உளுந்து தேவை தன்னிறைவு அடைய புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விருதுநகர் விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சுப்பாராஜ் தெரிவித்துள்ளார்.
ஆதார விதை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உளுந்து தேவை தன்னிறைவடைய வேளாண்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சான்று விதை வழங்குவதற்காக உளுந்து பயிரின் வம்பன்-11 ரகம் ஆதார விதை வழங்கப்பட்டு விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. வம்பன் பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தில் இதுவரை உளுந்தில் 11 ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வம்பன் 11 ரகம் 70 முதல் 75 நாள் வயதுடையது. இதன் பெற்றோர் பியூ1 மற்றும் கோ 6 ஆகும்.
இந்த ரகம் 30 முதல் 40 செ.மீ. உயரம் வளரக்கூடியது. மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை சுருங்கும் வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. அதிக காய் பிடிக்கும் திறன் உடையது. ஒரே மாதிரி முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டது.
ஏற்ற ரகம்
ஏக்கருக்கு சராசரியாக 380 கிலோ மகசூல் தர வல்லது. இது வம்பன்-8 ரகத்தை விட 12 சதவீதம் கூடுதலாகும். ஆடி, புரட்டாசி, சித்திரை பட்டத்திற்கு என தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றது. மேலும் இந்த ரகமானது சித்திரை, ஆடி, புரட்டாசி பட்டங்களுக்கு மிகவும் ஏற்ற பயிராகும்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடையன்குளம் கிராமத்தில் உளுந்து வம்பன்-11 விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.