பஞ்சாயத்து தலைவிக்கு மிரட்டல்; உறவினர்கள் மீது வழக்கு
களக்காடு அருகே பஞ்சாயத்து தலைவிக்கு மிரட்டல் விடுத்ததாக உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் முருகன் மனைவி அய்யம்மாள் (வயது 50). இவர் சீவலப்பேரி பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவரது கணவர் உடல்நல குறைவால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இந்நிலையில் முருகனின் தம்பி சிதம்பரபுரம் ராஜபுதூரை சேர்ந்த நம்பிராஜன் (42), அவரது உறவினர் தங்கராஜ் மகன் மதன்குமார் (32) ஆகிய இருவரும் அய்யம்மாளை அவதூறாக பேசியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சேதுராயபுரம் முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. இதில் விழாகுழுவினர் பஞ்சாயத்து தலைவி அய்யம்மாளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினர். அப்போது நம்பிராஜன் மைக்கில் அய்யம்மாள் பற்றி அவதூறாக பேசியுள்ளார். மதன்குமார் முகநூலில் அய்யம்மாள் குறித்து அவதூறாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதையடுத்து அய்யம்மாள் இருவரையும் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நம்பிராஜன், மதன்குமார் இருவரும் அய்யம்மாளை அவதூறாக பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இதுதொடர்பாக நம்பிராஜன், மதன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.