70 அடி உயர விளம்பர கோபுரத்தின் உச்சியில் ஏறி இந்து முன்னணியினர் போராட்டம்

Update: 2022-08-31 16:05 GMT


விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் 1,200 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி திருப்பூர் மாநகரில் உள்ள பிரதான சாலைகளின் இருபுறமும் இந்து முன்னணி கொடிகள் வரிசையாக கட்டப்பட்டு இருந்தன. குறிப்பாக அவினாசி ரோடு, மேம்பாலம், புஷ்பா ரவுண்டானா பகுதிகளில் கொடிகள் அதிகம் கட்டப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோட்டோரம் கட்டப்பட்டு இருந்த இந்து முன்னணி கொடிகளை வடக்கு போலீசார் அகற்றினார்கள். இதை அறிந்த இந்து முன்னணியினர் நேற்று காலை குமார் நகரில் திரண்டனர். எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் கொடிகளை அகற்றியதை கண்டித்து காலை 7 மணி அளவில் குமார் நகரில் அவினாசி ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.

பின்னர் காலை 9 மணி அளவில் போலீசாரை கண்டித்து இந்து ஆட்டோ முன்னணி நகர தலைவரான சாமுண்டிபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 40), இந்து முன்னணி நகர செயலாளரான மாஸ்கோ நகரை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகியோர் மேம்பாலம் அருகே உள்ள தனியார் விளம்பர பலகைகள் வைக்கும் 70 அடி உயர இரும்பு கோபுரத்தின் உச்சியில் ஏறி இந்து முன்னணி கொடியை ஏந்தி கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் சென்று அவர்களிடம் சமாதானம் பேசி கீழே இறங்க வைத்தனர். வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் கொடிகளை அகற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பாரபட்சத்துடன் கொடிகளை அகற்றியதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரெயில்வே மேம்பாலத்தில் காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்