நீட் தேர்வு முடிவுகள் வெளிவராத காரணத்தால் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு அமைச்சர் பொன்முடி பேட்டி

நீட் தேர்வு முடிவுகள் வெளிவராத காரணத்தால் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

Update: 2022-08-24 15:30 GMT


பொது கலந்தாய்வு ஒத்திவைப்பு

விழுப்புரத்தில் நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (அதாவது இன்று) முதல் தொடங்குவதாக இருந்தது. நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால் அந்த தேர்வு முடிவை பொறுத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்பட இருக்கிற காரணத்தால் நாளை (அதாவது இன்று) நடைபெறுவதாக இருந்த பொது கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது.

கால அவகாசம்

நீட் தேர்வு முடிவுகள் வந்து 2 நாட்களுக்கு பிறகு, இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும். இதுதான், இந்த கல்விக்கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பொருத்திருக்கிற காரணத்தால் இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. முதலில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் மிகவும் தாமதமாக வந்தது. இதனால் ஏற்கனவே காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 5 நாட்கள் விண்ணப்பிப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது.

அதுபோல் தற்போது நீட் தேர்வு முடிவுகள் முதலில் வரும் என்று நினைத்தோம். கடந்த 21-ந் தேதியே தேர்வு முடிவுகள் வரும் என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் அந்த தேர்வு முடிவுகள் வராமல் காலம் தாழ்த்தப்படுகிறது.

தள்ளி வைத்துள்ளோம்

நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டால் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பல பேர் அங்கே சென்றுவிடுவார்கள். அதனால்தான் சென்ற ஆண்டுகூட, அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்கள் காலியாக இருந்தன. இதனை கருத்தில் கொண்டுதான் நாங்கள் இந்த ஆண்டு, இக்கலந்தாய்வை தள்ளிவைத்துள்ளோம்.

நீட் தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்பட்டு விடும் என்று நாங்கள் நம்பித்தான் ஆகஸ்டு 25-ந் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். ஆனால் இன்னும் நீட் தேர்வு முடிவு வராத காரணத்தினால் தேர்வு முடிவு வருகிற வரை இந்த கலந்தாய்வை கொஞ்சம் தள்ளிவைக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

மாணவர்களின் நலனுக்கேற்ப...

கடந்த ஆண்டுபோல் இல்லாமல் இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் முழுமையான இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம். அதுபோல் பல்கலைக்கழகங்களில் காலியிடங்கள் உருவாகுவதை தவிர்ப்பதற்காகவும், மாணவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக பணம் செலுத்திவிட்டு அல்லல்படுகிற ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்பதற்காகவும் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்