தமிழகத்தில்கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்புசி.வி.சண்முகம் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம்சாட்டினார்.;

Update: 2023-03-31 18:45 GMT


நிவாரண உதவி

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹீம் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் இப்ராஹீம் குடும்பத்தினரை விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. மற்றும் அக்கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது அவரது குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார்.

தொடர்ந்து சி.வி.சண்முகம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

சீரழிந்த சட்டம்- ஒழுங்கு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்திருக்கிறது. போதைப் பொருட்கள் விற்பனை தங்கு தடையின்றி நடக்கிறது. இன்றைக்கு 24 மணி நேரமும் டாஸ்மாக் விற்பனை நடந்து வருகிறது. பள்ளி- கல்லூரிகளின் அருகில் சர்வசாதாரணமாக கஞ்சா விற்கப்படுகிறது.

கஞ்சா, போதைப்பொருள் விற்பனையால் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தின் பல இடங்களில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனையுடன், குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. வளவனூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தலித் சமூகத்தை சேர்ந்த மூதாட்டியை அடித்து உதைத்து சொத்தை எழுதி தருமாறு கேட்டு மிரட்டியுள்ளார். விக்கிரவாண்டியில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. ராதாபுரத்தில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

உரிய நிவாரணம்

நேற்று முன்தினம் இப்ராஹீம், ஒரு பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது 2 பேரால் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த குற்றவாளிகள் இருவரும் கஞ்சா போதையில் இருந்திருக்கின்றார்கள். குற்றவாளிகள் இருவரும் தி.மு.க.வின் தீவிர உறுப்பினர்கள். எனவே தமிழக அரசு, இப்ராஹீம் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் அமைதியாக இருந்தது. எந்தவொரு வியாபாரிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததா? மிரட்டப்பட்டார்களா? தாக்கப்பட்டார்களா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கு இந்த அரசு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, இணை செயலாளர் செங்குட்டுவன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், ராதிகா செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்