ஓய்வூதியர்களுக்கு விரும்பிய மாதத்தில் நேர்காணல்

ஓய்வூதியதாரர்கள் விரும்பிய மாதத்தில் நேர்காணலில் பங்கேற்கலாம் என்று கலெக்டர் ஷஜீவனா கூறியுள்ளார்.

Update: 2023-07-09 19:30 GMT

ஓய்வூதியதாரர்கள்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஓய்வூதியர்கள் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய குறிப்பிட்ட 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் ஓய்வூதியர்கள் அதிகம் பேர் கருவூலத்தில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இவ்வாறு நேர்காணல் செய்வதை எளிமையாக்கப்பட்டு்ளளது.

அதில் சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும், குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்திலும், சிவில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் இரண்டும் பெறுபவர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும் நேர்காணல் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

விரும்பிய மாதம்

இருப்பினும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023-ம் ஆண்டிற்கான நேர்காணலை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த நடைமுறையின்படி ஒவ்வொரு ஓய்வூதியர்களுக்கும் தாங்கள் எந்த மாதம் நேர்காணல் செய்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் www.karuvoolam.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாகவும் ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள், இந்த இணையதள முகவரியில் இருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்ரேட்டு, நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்வு நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

பொருந்தாது

கருவூலத்திற்கு நேரிடையாக வருகை தரும் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய புத்தகம், ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் உரிய மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை தொடர்புடைய ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்துக்கு சென்று நேர்காணலில் பங்கேற்கலாம்.

மேலும், கருவூலத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே, தமிழ்நாடு மின்வாரியம், உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியர்கள் மற்றும் இதர நிறுவனத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்