தமிழக அரசின் மீது ஆசிரியர்கள் கடும் அதிருப்தி
தமிழக அரசின் மீது ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் கூறினார்.
தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் மயில் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. அரசு தேர்தலின் போது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசு மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தி வர இருக்கும் தேர்தல்களில் நிச்சயம் எதிரொலிக்கும். ஆட்சி பொறுப்பு ஏற்று 2 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் நிலையிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க. அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவில்லை. அகவிலைப்படி உயர்வை கூட மத்திய அரசு அறிவித்த தேதியில் அறிவிக்காமல் 6 மாத காலம் கழித்து அறிவித்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தி.மு.க. அரசின் மீது கடுமையான அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். தி.மு.க. அரசை மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்த போராட்டங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முழுமையாக பங்கேற்கும். இவ்வாறு கூறினார்.