பெட்ரோல் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும்- அர்ஜூன் சம்பத் பேட்டி
பெட்ரோல் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும்- அர்ஜூன் சம்பத் பேட்டி;
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் சிவசேகர் என்பவரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் கார் முற்றிலும் சேதம் ஆனது. இதையடுத்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சிவசேகர் வீட்டுக்கு நேற்று வந்து அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, 'நாடு முழுக்க தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை மூலம் மிக பெரிய சதி முறியடிக்கப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் உடமைகள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் மூலம் இந்து முஸ்லீம் கலவரத்தை உண்டாக்குவதற்கு முயற்சி செய்தனர். அதற்கு பா.ஜ.க. வினரும், இந்து அமைப்புகளும் எதிர்வினை செய்யாமல் அமைதி காத்தார்கள்.
எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல. நச்சு அரசியலில் இருந்து விலகி இருப்போம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எது நச்சு அரசியல் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் செய்வதுதான் நச்சு அரசியல். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் செய்வதுதான் நச்சு அரசியல். இந்து என சான்றிதழ் அளித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆ.ராசா இந்துக்களை தவறாக பேசுவதுதான் நச்சு அரசியல். பெட்ரோல் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.