அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை வசதி அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தமிழ்நாட்டில் இன்னும் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.;

Update:2022-05-27 01:37 IST

நாகர்கோவில், 

தமிழ்நாட்டில் இன்னும் 10 மாதங்களில் அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நலத்திட்ட உதவி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு மொபட் வாகனமும், மாவட்ட சத்துணவுத்துறையின் சார்பில் அடுப்பில்லா சமையல் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்ற சமையலர்களுக்கு காசோலை வழங்கும் நிகழச்சியும் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மொபட் வாகனங்களை வழங்கினார். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலையை வழங்கி பாராட்டினார்.

கிராமங்களில் இணையதள சேவை

இதனைதொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை வழங்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக மொத்தம் 4 கட்டங்களாக இந்த பணிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் 4-வது கட்ட பணிக்கான ஒப்பந்தம் நாளை (அதாவது இன்று) பிற்பகலில் கையெழுத்தாக உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் இன்னும் ஒருசில தினங்களில் இந்த பணியைத் தொடங்கி வைப்பார். அடுத்த 10 மாத காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இணையதள சேவை கிடைக்கும். இதன்மூலம் 12 ஆயிரத்து 525 ஊராட்சி பகுதிகள் முழுமையாக இந்த திட்டத்தில் பயன்பெறும். நாகர்கோவில் கோணம் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகளுடன் கலந்தாய்வு

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்ற அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

கூட்டத்தில் பல்வேறு துறையில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித், மாவட்ட வருவாய் அதிகாரி (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) ரேவதி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய பாலம் கட்டும் பணி

சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட வீரப்புலி, தடிக்காரன்கோணம் ஊராட்சிக்கு உட்பட்ட கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் காலனிக்கு பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாஸ்கரன், கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் கேட்சன், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சங்கர், அருளானந்த ஜார்ஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்