இணையதள சேவை முடக்கம்
கும்பகோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இணையதள சேவை முடங்கியதால் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் தங்களது ஆவணங்களை பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.;
கும்பகோணம்;
கும்பகோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இணையதள சேவை முடங்கியதால் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் தங்களது ஆவணங்களை பதிவு செய்ய முடியாமல் சிரமப்பட்டனர்.
சார்பதிவாளர் அலுவலகம்
கும்பகோணத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொத்துக்கான ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழக அரசு பத்திரப்பதிவுகளை ஆன்லைன் முறையில் மாற்றியதை தொடர்ந்து பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.ஒரு சிலர் சுப முகூர்த்த நாளில் தங்களது சொத்தின் ஆவணங்களை பதிவு செய்ய விரும்பி அதற்கு ஏற்றது போல் முன்பதிவு செய்து சுப முகூர்த்த நாளில் தங்களது பத்திரத்தை பதிவு செய்கின்றனர். இதனால் முகூர்த்த நாட்களில் பத்திர பதிவு செய்ய வருபவர்கள் எண்ணிக்கை மற்ற சாதாரண நாட்களை விட அதிகமாக இருக்கும்.
இணையதள சேவை
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் புதிதாக வாங்கியுள்ள சொத்தின் ஆவணங்களை பதிவு செய்ய முன்பதிவு செய்து நேற்று முன்தினம் காலை ஆவண பதிவுக்காக கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் கும்பகோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காலை இணையதள சேவை முடங்கியது.இதனால் எந்த ஒரு ஆவணத்தையும் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவியது. முன்பதிவு செய்து வந்திருந்த பொதுமக்கள் ஆவண பதிவுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அன்று முழுவதும் இணையதள சேவை கிடைக்காததால் எந்த ஒரு ஆவணமும் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.