சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி ராட்சத பலூனை கலெக்டர் பறக்க விட்டார்

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டியின் ராட்சத பலூனை சென்னை மாவட்ட கலெக்டர் பறக்க விட்டார்.

Update: 2022-07-16 14:19 GMT

சென்னை,

சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் சென்னை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

இதில், கலெக்டர் அமிர்தஜோதி, ராட்சத பலூனை பறக்கவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கியூரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அதிகாரி இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்