ரூ.15 கோடி செலுத்தும் வரை நடிகர் விஷாலின் படங்களை வெளியிட இடைக்கால தடை
ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்தும் வரை நடிகர் விஷாலின் பட நிறுவனம் தயாரிக்கும் அல்லது நிதி உதவி செய்யும் எந்த ஒரு புதிய படங்களையும் வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
நடிகர் விஷால் என்ற விஷால் கிருஷ்ணா ரெட்டி தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடியை கடனாக பெற்றிருந்தார்.
இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு அன்புச்செழியனுக்கு செலுத்தியது. இதுதொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், இந்த கடன் தொகையை முழுவதுமாக திருப்பிச்செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.15 கோடி
இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடியை வழங்காமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும், அதன் சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி., உரிமையை விற்கவும் தடை விதிக்க வேண்டும் என கோரி லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதம் விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ரூ.15 கோடியை நடிகர் விஷால் ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 3 வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இடைக்கால தடை
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப்படி ரூ.15 கோடியை, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பெயரில் நிரந்தர வைப்பீடாக செலுத்தும் வரை நடிகர் விஷாலின் பட நிறுவனம் தயாரிக்கும் அல்லது நிதி உதவி செய்யும் எந்த புதிய படங்களையும் வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.