விஷம் கலந்த வாழைப்பழம் சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை

செஞ்சி அருகே கொக்கு பிடிப்பதற்காக வைத்திருந்த விஷம் கலந்த வாழைப்பழம் சாப்பிட்ட 3 சிறுவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Update: 2022-06-19 17:30 GMT

செஞ்சி

மயங்கி விழுந்த சிறுவர்கள்

செஞ்சி அருகே உள்ள கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன்கள் பாலாஜி(வயது 12), செல்வமூர்த்தி(7). குமார் மகன் விஜி என்கிற விக்னேஷ்(11). இவர்கள் மேல்சித்தாமூரில் உள்ள அரசு பள்ளியில் பாலாஜி 6-ம் வகுப்பும், செல்வமூர்த்தி 3-ம் வகுப்பும், விக்னேஷ் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று 3 பேரும் அங்குள்ள தொண்டி ஆற்றின் கரைக்கு சென்றனர். அப்போது ஆற்று பாலத்தின் கீழ் பகுதியில் கிடந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டனர். பின்னர் வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

விஷம் கலந்து வாழைப்பழம்

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், 3 சிறுவர்களையும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் பரிசோதனையில், 3 சிறுவர்களும் விஷம் கலந்த வாழைப்பழம் சாப்பிட்டு இருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போலீசார், அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொக்கு பிடிப்பதற்காக மர்மநபர் விஷத்தை வாழைப்பழத்தில் கலந்து வைத்திருந்ததும், இது தெரியாமல் சிறுவர்கள் எடுத்து சாப்பிட்டதும் தெரியவந்தது. வாழைப்பழத்தில் விஷம் கலந்து வைத்த மர்மநபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்