காட்டு யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

முதுமலை-ஸ்ரீமதுரை எல்லையோர குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2022-06-13 15:18 GMT

கூடலூர்,

முதுமலை-ஸ்ரீமதுரை எல்லையோர குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

காட்டு யானைகள்

கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி முதுமலை புலிகள் காப்பக கரையோரம் உள்ளது. இதனால் வனத்தில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக ஸ்ரீ மதுரை, முதுமலை எல்லையோரம் தொரப்பள்ளி தொடங்கி போஸ்பாரா வரை வனத்துறையினர் அகழி தோண்டி வைத்து உள்ளனர்.

தற்போது அகழி மண் நிறைந்து தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட வடவயல், அம்பலமூலா உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் நுழைந்து தினமும் பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் எல்லையோர அகழியை தூர்வார வேண்டும் என ஊராட்சி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே முதுமலை வனத்துறையினர் ஊருக்குள் காட்டு யானைகள் வராமல் இருக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தீ மூட்டி கண்காணிப்பு

இதற்காக மாலை 5 மணி முதல் முதல் மறுநாள் அதிகாலை வரை காட்டு யானைகள் வரக்கூடிய முக்கிய இடங்களில் அகழியில் காய்ந்த விறகுகளை அடுக்கி வைத்து தீ மூட்டி பொதுமக்கள் உதவியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சூரிய சக்தியில் செயல்படும் மின் வேலிகளை அமைத்து உள்ளனர். இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

சில யானைகள் மட்டும் ஊருக்குள் நுழைந்து பயிர்களை தின்று பழகிவிட்டன. இதனால் அதன் வழித்தடங்களில் மாலை தொடங்கி இரவில் தீ மூட்டி கண்காணிக்கப்படுகிறது.

இதன் மூலம் காட்டு யானை வர வாய்ப்பு இல்லை. அவ்வாறு வேறு இடங்கள் வழியாக காட்டு யானை ஊருக்குள் புகுந்தால் உடனடியாக விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்