வீடு, வீடாக தேசிய கொடி வழங்கும் பணி தீவிரம்

ஊட்டி நகராட்சியில் வீடு, வீடாக தேசிய கொடி வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2022-08-11 12:21 GMT

ஊட்டி

ஊட்டி நகராட்சியில் வீடு, வீடாக தேசிய கொடி வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தேசிய கொடி ஏற்ற அறிவுரை

75-வது சுதந்திர தினத்தையொட்டி நாளை மறுநாள்(சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

இந்த நிலையில் ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் 36 வார்டுகளில் வீடு, வீடாக தேசிய கொடி வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், ஆணையாளர் காந்திராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வினியோகம்

இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து தேசிய கொடிகளை வினியோகித்து வருகின்றனர். தனியார் பங்களிப்பு மூலம் ரூ.5 லட்சம் செலவில் 23 ஆயிரம் தேசிய கொடிகள் வழங்கப்பட உள்ளன.

தற்போதைய புதிய விதிகளின்படி காதி துணி மட்டுமன்றி பாலிஸ்டர் துணியால் செய்த தேசிய கொடிகளையும் பயன்படுத்தலாம். அத்துடன், மாலையில் கொடியை இறக்க வேண்டிய கட்டாயமில்லை. இரவிலும் தேசிய கொடி பறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குன்னூர் நகராட்சி

இதேபோன்று குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கும், மார்க்கெட்டில் உள்ள 800 கனடகளுக்கும் தேசிய கொடியை வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இன்று நகராட்சி அலுவலகத்தில் 30 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு வழங்க கவுன்சிலர்களுக்கும், மார்க்கெட் கடை வியாபாரிகளுக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது. மொத்தம் 15 ஆயிரம் தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்