தூரிப்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதியில் தூரிப்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2023-02-15 18:45 GMT

வால்பாறை

சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதியில் தூரிப்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி

வால்பாறையில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்ன்பிள் காட்சி முனை, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை, சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் கனமழை காரணமாக சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

தூரிப்பாலம் உடைந்தது

இதற்கிடையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்வதற்கு ஆற்றின் குறுக்கே கடந்த 1930-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட தூரிப்பாலத்தின் மீது நடந்து செல்ல வேண்டும். ஆனால் கடந்த ஆண்டில் பெய்த கனமழை காரணமாக பாலத்தின் மீது உள்ள பலகைகள் உடைந்தது. மேலும் பக்கவாட்டில் உள்ள கம்பி வலைகள் பழுதடைந்தது. இதன் காரணமாகவும், அங்கு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்து வந்தனர்.

சீரமைப்பு பணி

இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்லும் வசதி கொண்ட சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று வனத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்லும் வழியை சுற்றி வளர்ந்து இருந்த புதர் செடிகளை அகற்றி, தூரிப்பாலத்தின் மீதுள்ள பலகைகளை மாற்றி சீரமைக்கும் பணியை வனத்துறையினர் முழுவீச்சில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணி முடிந்தவுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்