தமிழக எல்லையில் வாகன சோதனை தீவிரம்

தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பொருட்களை கடத்துவதை தடுக்க தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-10-10 18:45 GMT

கூடலூர், 

தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பொருட்களை கடத்துவதை தடுக்க தமிழக எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

தடை செய்த பொருட்கள்

தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் இணையும் கூடலூர் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றுக்கொண்டு சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக கேரளாவுக்கு இயக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி சில வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் கடத்தும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இதை தடுக்க போலீசார் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை நீலகிரிக்குள் கொண்டு வருவதை தடுக்க முதுமலை வனத்துறையினர் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு மேற்கொண்டு பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கண்காணிப்பு தீவிரம்

இந்தநிலையில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் கார்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களை மாநில எல்லைகளான கக்கநல்லா, நாடுகாணி, சோலாடி, பாட்டவயல் உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து சந்தேகப்படும் படியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்துவதை தடுக்க கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் தடையை மீறி போதை மற்றும் குட்கா பொருட்களை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்