நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரம்

சீர்காழி தாலுகாவில் சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-10-02 18:45 GMT

திருவெண்காடு:

உவர் தன்மை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் சீர்காழி, கொள்ளிடம் ஆகிய வட்டாரங்கள் உள்ளன. இதில் பூம்புகார், வானகிரி, திருமுல்லைவாசல், புதுப்பட்டினம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வட்டாரங்களில் குறுவை சாகுபடி நிலப்பரப்பு மிக குறைவாக காணப்படுகிறது. ஏனெனில் அதிக இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உவர் தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடிகள் தீவிரம் காட்டி வந்தனர். இந்த பகுதியில் சுமார் 25,000 எக்டேர் விளைநிலங்கள் சம்பா சாகுபடி செய்ய தயாராகி வருகிறது.

நேரடி விதைப்பு

இந்த சாகுபடி விதை நாற்றங்கால், பாய் நாற்றங்கால் ஆகியவற்றின் மூலம் நெல் நாற்று தயார் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய நீர் வாய்க்கால்களில் வராத காரணத்தால், நாற்றங்கால் முறையில் நெல் நாற்று விடும் பணிகளை விவசாயிகள் கைவிட்டு அதற்கு பதிலாக அவ்வப்போது பெய்து வரும் மழை நீரை பயன்படுத்தி தற்போது டிராக்டர் மூலம் உழவு செய்த பின்னர், ஆடுதுறை 38, ஆந்திர பொன்னி, சொரனா சப், ஆடுதுறை 46, சாதனா உள்ளிட்ட நெல் ரகங்களை பயன்படுத்தி நேரடி விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

15 ஆயிரம் எக்டேர்

சுமார் 15 ஆயிரம் எக்டேர் விலை நிலங்களில் தற்போது நேரடி நெல் விதைப்பு செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து முன்னோடி விவசாயியும், திருநகரி ஊராட்சி மன்ற தலைவருமான சுந்தரராஜன் கூறியதாவது:-விவசாயிகள் சம்பா சாகுபடி யில் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடியில் ஈடுபட ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. நெல் விதை மானியம், நுண்ணூட்டம் மற்றும் உரங்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகிறது.் நீர் பாய்ச்சும் குழாய்கள், களை எடுக்கும் கருவிகள் ஆகியவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுவது சாகுபடி செலவை பாதி அளவுக்கு குறைத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்