"சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க உளவுப்படை தேவை" தொல்.திருமாவளவன் பேட்டி

“சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க உளவுப்படை தேவைப்படுகிறது” என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

Update: 2023-01-20 22:22 GMT

தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் கண்டித்து உள்ளார். இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இரும்புக்கரம் கொண்டு நசுக்குவோம் என உறுதியளித்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். அந்த விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உளவுப்பிரிவு

இதுபோன்ற செயல்களை தடுப்பதற்கு தனி உளவுப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை தடுக்க எவ்வாறு கியூ பிரிவு இருக்கிறதோ அதுபோல சாதி, மதத்தின் பெயரால் வன்முறைகள் நடைபெறுவதை தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு உளவுப்படை தேவைப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளது. அதனை கண்டறிவதற்கு சிறப்பு விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கருதக்கூடியவர்கள் மீண்டும் ராமர் பாலம் பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள். இந்த திட்டம் தொடர்பாக மீனவர்கள், மக்களின் கருத்துகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு கூட்டணி கட்சிகள் தீவிரமாக பணியாற்றுவோம்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்