விவசாயிகள், உழவன் செயலியில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்
விவசாயிகள், உழவன் செயலியில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
பல்வேறு நலத்திட்டங்கள்
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண்மை துறையில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதற்காகவும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மை துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப்பலன்களை பெறுவதற்காகவும், 'உழவன் செயலி' அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அனைத்து விவசாயிகளும் தங்கள் செல்போனில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து திட்டப்பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் முன்பதிவு செய்வதனால் துறையில் வழங்கப்படும் இடுபொருட்கள் மற்றும் திட்டப்பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம்.
செல்போனில்...
ஆன்ட்ராய்டு செல்போனில் பிளே ஸ்டோர் அல்லது ஐ-போனில் ஆப் ஸ்டோர் மூலமாக உழவன் என உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்த பிறகு விவசாயியின் பெயர், செல்போன் எண், மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமம் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்து ஒருமுறை பதிவு செய்திட வேண்டும். திட்டங்களின் மானிய விவரம் மற்றும் விவசாயிகள் திட்டப்பலனை பெற தேவையான தகுதிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள 'மானிய திட்டங்கள்' என்ற ஐகானை கிளிக் செய்து துறை, திட்டம், வகை, வகுப்பு போன்றவற்றை தேர்வு செய்து உள்ளீடு செய்து பின் தேடுக எனும் ஐகானை கிளிக் செய்திட வேண்டும்.
அதன் பின்பு, திட்ட இனம், அதற்கான மானிய விவரம், மானியம் பெற தேவையான தகுதிகள், விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் செல்போன் திரையில் காண்பிக்கப்படும்.
இடுபொருள்-திட்ட பலன்கள்
விவசாயிகள் தாங்கள் பெற தகுதியான திட்ட இனங்களை தெரிந்து கொண்ட பின்பு, 'இடுபொருள் முன்பதிவு' எனும் ஐகானை கிளிக் செய்யவும். துறை, திட்டம், வகை, இனங்களை தேர்வு செய்த பின்பு, விவசாயிகள் தங்களது ஆதார் எண், விவசாயியின் பெயர், தந்தை அல்லது மனைவி பெயர், செல்போன் எண், சமூக நிலை, நில உரிமையாளர் அல்லது சாகுபடியாளர், பாலினம், புகைப்படம், முகவரி, நில விவரங்கள், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்க எனும் ஐகானை கிளிக் செய்யவும். பதிவு செய்த விவரம் விவசாயிக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட விவரங்களை சரிபார்த்து பதிவு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளால் கோரப்பட்ட இடுபொருள் மற்றும் திட்ட பலனை பெற ஒப்புதல் வழங்கப்படும். அதன்பின்பு விவசாயிகள் சம்பந்தப்பட்ட துறையின் அலுவலகத்திற்கு சென்று இடுபொருட்கள் அல்லது திட்டப்பலனை பெறலாம். மேலும் பயிற்சி அல்லது செயல் விளக்கங்களில் பங்கேற்று பயன்பெறலாம். உழவன் செயலியை மேற்கூறியவாறு பயன்படுத்த தெரியாதவர்கள் அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று உழவன் செயலியை பயன்படுத்துவது குறித்து வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.