சாராயம் காய்ச்சப்படும் மலைப்பகுதியில்போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
வாணியம்பாடி அருகே சாராயம் காய்ச்சப்படும் மலைப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.;
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொரிப்பள்ளம் பகுதி தமிழக- ஆந்திர எல்லையில் உள்ளது. இங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. சாராயத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், சம்பவ இடத்திற்கு எந்த உயர் போலீஸ் அதிகாரிகளும் இதுவரையில் சென்றதில்லை.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் அந்தப்பகுதிக்கு சென்று அங்குள்ள மலைப்பகுதி, அங்கு சாராயம் காய்ச்சப்படும் இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாராயம் காய்ச்சுவதை தடுப்பது குறித்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் எடுத்துரைத்தார்.
தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள இந்த மலைப்பகுதியில் இரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் தொடர்ந்து சாராயம் காய்ச்சி வருகின்றனர். இவர்களை முழுமையாக ஒழித்தால் திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம் முழுமையாக ஒழிக்கப்பட்டது என்ற நிலை ஏற்படும் என்றார்.
சோதனைச்சாவடி
தொடர்ந்து தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள தகரகுப்பம் போலீஸ் சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தினசரி வாகனங்கள் வந்து செல்வது குறித்தும், சாராய வியாபாரிகள் கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் குறித்தும், இந்தவழியாக ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுப்பது குறித்தும், அங்கு பணியில் இருந்த போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.