மாங்காட்டில் மழைநீர் கால்வாய் பணிகள் ஆய்வு 'இனியும் தண்ணீர் தேங்கினால் அனைவரும் பணியிடை நீக்கம்'
மாங்காட்டில் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு, இனியும் அங்கு மழைநீர் தேங்கினால் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவீர்கள் என அதிகாரிகளை எச்சரித்தார்.;
குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மாங்காடு, ஓம் சக்தி நகர் பகுதியில் ஆய்வு செய்தபோது, "அந்த பகுதியில் மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்தும், அங்கு தண்ணீர் தேங்கினால் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவீர்கள்" என்று அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது அவருடன் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, நகராட்சி தலைவர்கள் சுமதி முருகன், சத்தியமூர்த்தி, நகராட்சி கமிஷனர்கள் சுமா, தாமோதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் ரூ.1 கோடியே 25 லட்சத்திலும், அனகாபுத்தூர் மேட்டு தெருவில் ரூ.4½ கோடியிலும் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு செய்த இறையன்பு, தாம்பரம் மாநகராட்சி பகுதியில் ரூ.30 கோடியே 75 லட்சத்தில் 12 இடங்களில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மழைநீர் கால்வாய் பணிகள் நிறைவடைந்த இடங்களில் சாலைகளை உடனடியாக சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அவருடன் தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஜான் லூயிஸ், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மண்டல தலைவர் வே.கருணாநிதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர், பருத்திப்பட்டு, அயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
அவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ், பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அலுவலர் சுந்தரவல்லி, ஆவடி மாநகராட்சி கமிஷனர் க.தர்ப்பகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.