தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு-குறைகளை நிவர்த்தி செய்ய டிரைவர்களுக்கு அறிவுறுத்தல்

சேலத்தில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது குறைகளை நிவர்த்தி செய்ய டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.;

Update: 2023-05-20 22:53 GMT

பள்ளி வாகனங்கள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்ய நேற்று கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அதிகாரிகள் ஆய்வு

சேலம் உதவி கலெக்டர் (பொறுப்பு) மாறன் தலைமையில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜராஜன் (பொறுப்பு) மோட்டார் வாகன ஆய்வாளர் ராம ரத்தினம், போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். அதாவது, முதலுதவி பெட்டி, அவசர வழி, தீயணைப்பு கருவி உள்ளதா? என்றும், படிக்கட்டுகள், ஜன்னல்கள், இருக்கைகள் நல்லநிலையில் உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பிரேக் நல்ல நிலையில் இருக்கிறதா? வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? தகுதிச்சான்று, இன்சூரன்ஸ் சரியாக உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தம் 84 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தொடர்ந்து பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு கருவி மூலம் எப்படி அணைப்பது? பள்ளி குழந்தைகளை வேகமாக வெளியேற்றுவது குறித்து பள்ளி வாகன டிரைவர்களுக்கு செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் விளக்கம் அளித்தனர். மேலும், முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

டிரைவர்களுக்கு அறிவுரை

இது குறித்து சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜராஜன் நிருபர்களிடம் கூறுகையில், முதல் நாளில் 84 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், குறைபாடு உள்ள வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்திற்கு அனைத்து பள்ளி வாகனங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். அதேசமயம், பள்ளி வாகனங்களை ஓட்டும்போது, மிகவும் கவனமுடன் இயக்க வேண்டும் என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்