திருவள்ளூர் காவலர் பயிற்சி மையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

திருவள்ளூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

Update: 2022-07-10 08:17 GMT

திருவள்ளூர்,

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு தாமரைப்பாக்கம், வெங்கல், சித்தஞ்சேரி, புல்லரம்பாக்கம் வழியாக திருவள்ளூருக்கு 60 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வருகை தந்தார். வழியில் வெங்கல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள பிரச்சினைகள் குறித்தும், காவலர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனையடுத்து சீத்தஞ்சேரி அடுத்த அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு காப்பகத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஆண்கள் காவலர் பயிற்சி மையத்தையும், கனகவல்லிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் காவல் பயிற்சி மையத்தை ஆய்வு செய்தார்.

அப்போது டிஜிபி சைலேந்திரபாபு காவலர் பயிற்சி மையத்தில் மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டு பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து பயிற்சி பெறும் காவலர்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழக முழுவதும் பத்தாயிரம் காவலர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதில் திருவள்ளூர் பயிற்சி மையத்தில் 186 ஆண் காவலர்களில் பெரும்பாலும் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 7 மாத பயிற்சியில் தற்போது நான்கு மாதங்கள் முடிவடைந்து விட்டது.

இவர்களுக்கு காவல்துறையில் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வின் போது அனைத்து இளம்காவலர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில் அனைவருமே பட்டதாரி காவலர்கள், 30 சதவீதம் காவலர்கள் பொறியியல், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேரும் பயிற்சி அளிப்பது இதுவே முதன்முறை. ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேரும் பணிக்கு வரும்போது காவல்துறை இளமையான காவல்துறையாக காட்சியளிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்