கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எண்ணேகொள் கால்வாய் திட்டப்பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எண்ணேகொள் அணைக்கட்டு
கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே எண்ணேகொள் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலத்தில் வரும் உபரிநீரை வலது மற்றம் இடதுபுற கால்வாய் அமைத்து கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சி பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல எண்ணேகொள் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. எண்ணேகொள், செம்படமுத்தூர், ராகிமானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடந்து வரும் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மற்றும் நீர்வழங்கும் கால்வாய்கள், தொட்டிபாலம் அமைக்கும் பணிகளை கலெக்டர் சரயு நேரில் ஆய்வு செய்தார்.
தொட்டிபாலம்
இதுகுறித்து அவர் கூறுகையில், எண்ணேகொள் அணைக்கட்டில் இருந்து வலதுபுறத்தில் 50.65 கி.மீட்டர் தொலைவிற்கு பிரதான கால்வாயும், 5.51 கி.மீட்டர் கிளை கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் இடதுபுறத்தில் 22.65 கி.மீட்டர் தொலைவிற்கு பிரதான கால்வாயும், 2.40 கி.மீட்டர் தொலைவிற்கு கிளை கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகிறது.
வலதுபுற கால்வாய்க்கு தேவையான 207.59 மில்லியன் கனஅடியும், இடதுபுற கால்வாய்க்கு தேவையான 161 மில்லியன் கனஅடியும் என மொத்தம் 368.59 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்க ஏதுவாக கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராகிமனப்பள்ளி ஏரியின் குறுக்கே நீர் கொண்டு செல்லும் வகையில் 450 மீட்டர் நீளத்துக்கு தொட்டிபாலம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
3,408 ஏக்கர் நிலங்கள்
இதுவரை 30 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் மூலம் சுமார் 33 ஏரிகள் மற்றும் 3,408 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இந்த கால்வாய் பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர்கள் சையத், கார்த்திகேயன், காளிபிரியன் மற்றும் நீர்வளத்துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.