'தினத்தந்தி' செய்தி எதிரொலிஅடிப்படை வசதிகள் குறித்து குடிநெய்வேலி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு
‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக குடிநெய்வேலி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக குடிநெய்வேலி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அடிப்படை வசதி
நாகை அருகே பாப்பா கோவில் ஊராட்சியில் குடிநெய்வேலி கிராமம் உள்ளது. பெரும்பாலும் விவசாயிகளும், விவசாயக் கூலி தொழிலாளர்களுமே வசித்து வரும் இந்த கிராமத்தில் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
'தினத்தந்தி' செய்தி எதிரொலி
இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று நாகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, பாலமுருகன் ஆகியோரை கொண்ட அதிகாரிகள் குழுவினர், மின்வாரிய துறையினர் அந்த கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது அடிப்படை வசதிகள் கேட்டு எழுத்துபூர்வமான மனுக்களை அதிகாரிகளிடம் பொது மக்கள் வழங்கினர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமமக்களிடம் உறுதி அளித்தனர். இதன் முதல் கட்டமாக மின் இணைப்பு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்து வரும் அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.