ஓசூர் அருகே வெடி விபத்து நடந்த இடத்தில்2-வது நாளாக சி.ஐ.டி. போலீசார் ஆய்வு

ஓசூர் அருகே வெடி விபத்து நடந்த இடத்தில 2-வது நாளாக கர்நாடக சி.ஐ.டி. போலீசார் ஆய்வு நடத்தினர்.

Update: 2023-10-10 19:30 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே வெடி விபத்து நடந்த இடத்தில 2-வது நாளாக கர்நாடக சி.ஐ.டி. போலீசார் ஆய்வு நடத்தினர்.

14 பேர் பலி

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் அத்திப்பள்ளியில் உள்ள நவீன் என்பவருடைய பட்டாசு கடையில் கடந்த 7-ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 14 வாலிபர்கள் உடல் கருகி இறந்தனர். 7 பேர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனை தொடர்ந்து கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் வெடி விபத்தை குற்ற புலனாய்வு துறைக்கு மாற்றி அறிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கர்நாடக மாநில சி.ஐ.டி. பிரிவு போலீசார் வெடி விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

2-வது நாளாக ஆய்வு

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி. சலீம், ஐ.ஜி.பி பிரவீன் மதுக்கர் பவார் ஆகியோர் வெடி விபத்து பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அத்திப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா கவுடா, சப்-இன்ஸ்பெக்டர் நாராயண ராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வில் சம்பவ இடத்தில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது? இதன் மூல காரணம் என்ன? மின் கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் பீடி சிகரெட் புகைத்து அங்கு வீசினரா? என பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்