காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணி

inspection;

Update: 2023-08-27 12:51 GMT

தளி

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலைத் தொடரில் உற்பத்தியாகி மேற்கு நோக்கி பாய்ந்து பெரியாறு, சாலக்குடி மற்றும் பாரதப்புழா படுகை வழியாக அரபிக்கடலில் கலக்கும் உபரி நீரினை கிழக்கு திசையில் திருப்பி சமமட்டக்கால்வாய் மூலமாக ஆழியார், திருமூர்த்தி அணைக்கு செல்லப்பட்டு பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளில் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரத்து 730 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் உயிர்நாடியான சமமட்டக் கால்வாயானது சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தொடங்கி திருமூர்த்தி அணை வரை மொத்தமுள்ள 49.300 கிலோ மீட்டர் நீளத்தில் 30.100 கிலோ மீட்டர் முதல் 49.300 கிலோ மீட்டர் வரை உள்ள பகுதி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.

சமமட்டக்கால்வாய் நீண்ட காலப்பயன்பாடு மற்றும் வாய்க்கால் பெரும்பாலும் வனப்பகுதியில் உள்ளதால் மழைகாலங்களில் ஏற்படும் மண் மற்றும் பாறை சரிவுகளால் வாய்க்கால் பழுதடைந்தது.இதனால் அதிக அளவில் நீர் இழப்பு ஏற்பட்டு திருமூர்த்தி அணைக்கு முழுமையாக தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கால்வாயை சீரமைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் ரூ.184 கோடி மதிப்பீட்டில், மூன்று சிப்பங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் ரூ.62 கோடியில் 30.100 கி.மீ முதல் 49.300 கி.மீ வரை உள்ள கால்வாய் பகுதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்து விட்டது.புனரமைப்பு பணிகளின் போது நல்ல நிலையில் இருந்து வந்த கருங்கல் கட்டுமானங்கள், படுகையிலுள்ள கான்கீரிட் கட்டுமானங்கள் ஆகியவை தற்போது சேதமடைந்து உள்ளது.அதன் பிறகு தொடர் பயன்பாட்டால் புனரமைப்பு செய்யாத பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர்கள் ஆங்காங்கே சரிந்து தண்ணீர் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தியது. இதனால் அதிகப்படியான நீரிழப்பு ஏற்பட்டு முழுமையான அளவு தண்ணீரை கொண்டு செல்ல இயலவில்லை.

இந்த சூழலில் விடுபட்ட 5 ஆயிரத்து 260 மீட்டரில் 2 ஆயிரத்து177 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் இரு பக்கவாட்டு சுவர்கள் மற்றும் படுகையை ஆர்.சி.சி கட்டுமானமாக புனரமைக்கவும், 3ஆயிரத்து083 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் ஒரு பக்கம் ஆர்.சி.சி கட்டுமானமாகவும் மற்றும் படுகையில் பி.சி.சி கட்டுமானமாக புனரமைப்பதற்கு ரூ.72 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. 2022 ம் ஆண்டில் தொகுப்பு அணைகளில் தண்ணீர் நிரம்பி இருந்த காரணத்தினால் சமமட்டக்கால்வாயில் 514 மீட்டர் நீளத்திற்கு மட்டுமே புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சமமட்டக்கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு 2 மற்றும் 3 ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பாசனம் முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 27 ம் தேதி சமமட்டக்கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு மூன்று வெவ்வேறு இடங்களில் விடுபட்ட பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 603 மீட்டர் நீளத்தில் 1985 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் இருபக்கவாட்டு சுவர்கள் ஆர்.சி.சி கட்டுமான புனரமைப்பாகவும், 618 மீட்டர் நீளத்திற்கு கால்வாயின் இடது பக்கவாட்டு சுவர் ஆர்.சி.சி கட்டுமான புனரமைப்பாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தப் பணியானது இந்த மாத இறுதிக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கால்வாயில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணியை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

அதற்கு முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் நினைவைப் போற்றும் வகையில் தளி பேரூராட்சிக்கு உட்பட்ட திருமூர்த்தி நகர் பகுதியில் ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்ற அரங்கம் அமைக்கும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



Tags:    

மேலும் செய்திகள்