மதுரை மத்திய சிறையில் கைதி திடீர் சாவு
மதுரை மத்திய சிறையில் கைதி திடீரென உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தர்மர் (வயது 52). இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார். இ்ந்த நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது தர்மர் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே நேற்று காலை தேனி உத்தமப்பாளையத்தை சேர்ந்த கைதி அஜித்குமார்(28) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் சிறையில் ஒரே நாளில் 2 தண்டனை கைதிகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரித்த போது சிறையில் டாக்டர்கள் இல்லாததால் கைதிகளின் உடல்நிலையை சரியாக கவனிக்க முடியவில்லை.
மேலும் டாக்டர் ஒருவர் மட்டும் தான் பணியில் இருப்பதாகவும், அவரும் பகலில் பணி முடிந்து சென்று விடுவதாகவும், நர்சுகளை வைத்து தான் கைதிகளுக்கு இரவு நேரங்களில் சிகிச்சை அளிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் தண்டனை கைதிகள் பலர் மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தால் இது போன்ற உயிரிழப்பை தடுக்க முடியும். எனவே சிறை நிர்வாகம் உரிய டாக்டர்களை நியமனம் செய்து கைதிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.